திருப்புவனத்தில் தெப்பகுளத்திற்கு ஆண்டு விழா கொண்டாடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2024 10:06
திருப்புவனம்; திருப்புவனத்தில் நேற்று தெப்பகுளத்திற்கு பக்தர்கள் ஆண்டு விழா கொண்டாடியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கோயில் நகரமான திருப்புவனத்தைச் சுற்றிலும் வைகை ஆறு, குளங்கள், கண்மாய்கள் என ஏராளமானவைகள் இருந்தன. காலப்போக்கில் நீர் நிலைகள் வற்றியதால் பலரும் ஆக்ரமித்ததால் மறைந்து போனது, இதில் சிவகங்கை ரோட்டில் உள்ள மார்கண்டேய தீர்த்தமும் ஒன்று. திருப்புவனத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க வரும் பக்தர்கள் மார்கண்டேய தீர்த்தத்தில் நீராடி புஷ்பவனேஷ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம். பராமரிப்பு இல்லாததால் குப்பை கொட்டும் இடமாக மாறி விட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் ஜெயகாந்தனிடம் பக்தர்கள் முறையிட்டதை தொடர்ந்து பொதுமக்கள் பங்களிப்புடன் தூர் வாரப்பட்டு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பபட்டது. வைகை ஆற்றில் நீர் வரத்தின் போது தண்ணீர் கொண்டு வரும் வகையில் குழாய் அமைக்கப்பட்டது. மேலும் தெப்பகுளத்தைச் சுற்றிலும் பொதுமக்கள் நடை பயிற்சி செய்ய பேவர் பிளாக் கற்கள் பாதை, ஒய்வெடுக்க சிமெண்ட் நாற்காலி உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டன. மார்கண்டேய தீர்த்த தெப்பகுளத்தில் தண்ணீர் இருப்பதால் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அரசு பெண்கள் பள்ளி, யூனியன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறையவே இல்லை. நேற்றுடன் தெப்பகுளம் புரைமைக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆனதையடுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவில் கவுன்சிலர்கள் அயோத்தி, பாரத்ராஜா உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.