வரகுணேஸ்வரர் கோயிலில் அருணகிரிநாதர் குருபூஜை; திருவாசகம் முற்றோதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2024 11:06
சாலைகிராமம்; இளையான்குடி அருகே சாலைக்கிராமத்தில் உள்ள திருக்காம கோடீஸ்வரி உடனுறை வரகுணேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அருணகிரிநாதர் குருபூஜை, திருவாசக முற்றோதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அருணகிரிநாதர் சுவாமிகள் முக்தியடைந்த நாளன்று குரு பூஜை விழா ஆண்டுதோறும் முருக பக்தர்களால் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு சாலைகிராமம் வரகுனேஸ்வரர் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு நேற்று முன்தினம் அபிஷேக, ஆராதனைகள்,அஸ்டோத்திர நாமாவளி பூஜைகள் காலை 10:00 மணிக்கு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு அருணகிரிநாதர் மற்றும் கிருபானந்த வாரியார் மற்றும் முருகேச சுவாமிகள் ஆகியோர்களின் திருவுருவப்படம் கோயிலிலிருந்து புறப்பட்டு திருவீதி ஊர்வலம் திருப்புகழ் பாராயணத்துடன் நடைபெற்றது.நேற்று திருக்கழுக்குன்றம் திருவாசக சித்தர் அருட்குருநாதர் சிவத்திரு தாமோதரனின் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி கோயில் முன்புறம் உள்ள மேடையில் நடைபெற்றது.இந்த திருவாசகம் முற்றோதலில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சிவனடியார்கள் மற்றும் இளையான்குடி பரமக்குடி மதுரை மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சாலைக்கிராமம் அருணகிரிநாதர் பக்த சபை,திருச்செந்தூர் பாதயாத்திரை குழு, இளையான்குடி மாற நாயனார் அடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.