பதிவு செய்த நாள்
12
நவ
2012
10:11
தூத்துக்குடி:திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழா, நவ.13 காலை, யாக சாலை பூஜையுடன் துவங்குகிறது.விழா நாட்களில், தினமும் காலை, மாலையில் யாக சாலை பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சூர சம்ஹாரம், ஆறாம் நாளான, நவ., 18ம் தேதி மாலை, கோவில் கடற்கரையில் நடக்கிறது.இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
திருப்பரங்குன்றத்தில் நவ 13 கந்த சஷ்டி திருவிழா துவக்கம்
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி திருவிழா நவ.,13 காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.காலை 9 மணிக்கு, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேக, ஆராதனைகள் முடிந்து, காப்பு கட்டப்படும். திருவிழா சிவாச்சார்யாருக்கு காப்பு கட்டிய பின், விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும்.திருவிழா நடக்கும் 7 நாட்களும், இரவு ஏழு மணிக்கு தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி, கோயில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் சென்று அருள்பாலிப்பர். நவ.,17ல், வேல் வாங்குதல், நவ.,18ல், சூரசம்ஹாரலீலை நடக்கிறது. நவ., 19ல் திருவிழா முடிகிறது
தீபாவளி தினத்தன்று கந்தசஷ்டி விழா:வயலூர் முருகன் கோவிலில் துவக்கம்
திருச்சி: தீபாவளியன்று வயலூர் முருகன் கோவிலில் துவங்கும் கந்தசஷ்டி விழா, தொடர்ந்து, 7 நாட்கள் வெகு சிறப்பாக நடக்கவிருக்கிறது.திருவண்ணாமலையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்ய முயன்ற அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, "வயலூருக்கு வா என்று அழைத்த முருகன், அவரது நாக்கில் வேலினால் "ஓம் என்றெழுதி, "திருப்புகழ் பாட வரமளித்த தெய்வீக திருத்தலம், திருச்சியை அடுத்த வயலூர் முருகன் கோவில்.கோவிலின் எதிரே உள்ள சக்தி தீர்த்தத்தில் அருணகிரிநாதர் தொடர்ந்து நீராடி, தனது தொழுநோய் நீக்கப்பெற்றார் என்பது வரலாறு. இத்தகைய சிறப்புமிக்க வயலூர் முருகன் கோவிலில், பிரசித்திப்பெற்ற கந்தசஷ்டி விழா, (13ம் தேதி) தீபாவளியன்று துவங்கி, வரும், 19ம் தேதி வரை தொடர்ந்து, 7 நாட்கள் நடக்கிறது. நவ.13 காலை, 8 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், 9 மணிக்கு, சுப்ரமணிய ஸ்வாமிக்கு லட்சார்ச்சனை, 11 மணி க்கு சண்முகா அர்ச்சனை, மாø ல, 6 மணிக்கு, ரக்ஷா பந்தனம் என்ற காப்பு கட்டுதல், அபிஷேக ஆராதனை, இரவு, 8 மணிக்கு, சிங்காரவேலவர், பச்சைமயில் வாகனத்தில் திருவீதியுலா வரும் வைபங்கள் நடக்கின்றன.
நவ.14 துவங்கி, 17ம் தேதி வரை தினமும் காலை, 9 மணிக்கு சுப்ரமணிய ஸ்வாமிக்கு லட்சார்ச்சனையும், 11 மணிக்கு, சண்முகா அர்ச்சனையும், இரவு, 8 மணிக்கு, சிங்காரவேலவர், கேடயம், சேஷ வாகனம், ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில், திருவீதியுலா வரும் வைபவங்களும் தொடர்ந்து நடக்கின்றன.வரும், 16ம் தேதி இரவு, 8 மணிக்கு சிங்காரவேலவர், அன்ன வாகனத்தில் எழுந்தருளி, யானைமுக சூரனுக்கும், 17ம் தேதி இரவு, 8 மணிக்கு, வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிங்கமுக சூரனுக்கும் பெருவாழ்வு அளிக்கும் வைபவம் நடந்தேறுகிறது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான, "சூர சம்ஹாரம், வரும் 18ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 7 மணிக்கு, சண்முகா அர்ச்சனையும், 10 மணிக்கு, அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்வும், இரவு, 7.30 மணிக்கு, சிங்காரவேலவர் ஆட்டுக்கடா வாகனத்தில் எழுந்தருளி, சூரபதுமனுக்கு பெருவாழ்வு அளித்தல் (சூர சம்ஹாரம்) வைபவமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, முத்துக்குமார ஸ்வாமி, வெள்ளிக்கேடயத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். வரும், 19ம் தேதி காலை, 9 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, சண்முகா அர்ச்சனை, அன்றிரவு, 8 மணிக்கு, தேவசேனா (தெய்வானை)- சுப்ரமணிய ஸ்வாமி திருக்கல்யாணம் உற்சவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, முருகனிடம் மனமுருகி வேண்டிக்கொண்டால், அடுத்த கந்தசஷ்டி திருவிழாவுக்குள் திருமணம் கைகூடும் என்று கண்கூடான உண்மை. திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, இரவு, 7 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும், 7.30 மணிக்கு சென்னை இசைக்கல்லூரி மாணவர்கள் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி கருணாகரன் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
பழநி கோயிலில் நவ.13 கந்த சஷ்டி விழா துவக்கம்
பழநி:பழநி கோயிலில் நவ.13 காப்புக்கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்குகிறது. மலைகோயிலில் உச்சிக்காலத்தை தொடர்ந்து மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, விநாயகர், துவாரபாலகர்கள், நவவீரர்களுக்கு காப்புக்கட்டுதல் நடைபெறும்.விழாவின் ஆறாம் நாளான நவ., 18 ல் கந்தசஷ்டியாகும். கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் மாலை 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் நடைபெறும். நவ., 19 காலை 9.30 மணிக்கு மேல் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மலைகோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் நடைபெறும். ஏற்பாடுகளை பழநி கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் செய்து வருகிறார்.
திருமலைக்குமார சுவாமி கோயிலில் சந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம்
கடையநல்லூர்:பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் கந்தசஷ்டி விழா நவ.11 அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.திருமலைக்குமாரசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கந்தசஷ்டி விழா நவ.12 அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஆரம்பமானது. 5.50 மணிக்கு கொடியேற்று விழா திருக்குமரனுக்கு அரோகரா கோஷங்கள் முழங்கிட நடந்தது. தொடர்ந்து திருமலைக்குமரனுக்கு விசேஷ பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வரும் 16ம் தேதி சண்முகப்பெருமான் படிவிட்டு இறங்குகிறார். 17ம் தேதி பெரும் திருப்பாவாடை நிகழ்ச்சி நடக்கிறது. 18ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. சூரசம்ஹாரத்தில் மாலை 6 மணிக்கு யானை முகசூரனையும், 6.30 மணிக்கு சிங்கமுக சூரனையும், 6.45மணிக்கு மகா சூரனையும் திருக்குமரன் சம்ஹாரம் செய்கிறார். 19ம் தேதி வண்டாடும் பொட்டலில் திருத்தேரோட்டம் நடக்கிறது.கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று நடந்த விழாவில் திருக்கோயில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான கார்த்திக், பண்பொழி டவுண் பஞ்., தலைவர் சங்கரசுப்பிரமணியன், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், ராசா கன்ஸ்ட்ரக்சன் பொதுமேலாளர் ரவிராஜா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.