பதிவு செய்த நாள்
28
ஜூன்
2024
01:06
காஞ்சிபுரம்:தமிழக சட்டசபையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின்போது, திருப்பணிகள், புதிய தேர், மராமத்து பணிகள் பற்றிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார். தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில், 1.87 கோடி ரூபாயிலும், அமரம்பேடு கரியமாணிக்க பெருமாள் கோவில், 1.15 கோடி ரூபாயிலும் திருப்பணிகள் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில், மானிய கோரிக்கை அறிவிப்புகள், துறை வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், திருப்பணி, மராமத்து பணிகள் என, பல்வேறு பணிகள் மேற்கொள்வது தொடர்பான அறிவிப்புகளை, அமைச்சர் சேகர்பாபு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார். அவரது அறிவிப்புகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழக சட்டசபையில், கடந்தாண்டு அவர் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளில், நிதி ஒதுக்கீடு செய்து திருப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி, வல்லகோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு திருமண மண்டபம் மற்றும் விடுதி கட்டும் பணிகளும் வேகமெடுத்துள்ளன. காஞ்சிபுரத்தில் பல்வேறு பழமை வாய்ந்த கோவில்களில் திருப்பணிகள் நடக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கோவில்கள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவில், 1.87 கோடி ரூபாயில், திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
குன்றத்துார் தாலுகாவிற்குட்பட்ட அமரம்பேடு கரியமாணிக்க பெருமாள் கோவில், 1.15 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் 23 கோவில்களுக்கு, 15.6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தேர் செய்யப்படும். இதில், மாங்காடு, வெள்ளீஸ்வரர் கோவிலுக்கும் புதிய தேர் செய்யப்பட உள்ளது.
தமிழகம் முழுதும், 40 கோவில்களில், 8.15 கோடியில் தேர் கொட்டகை அமைக்கப்பட உள்ளன. இதில், இளையனார்வேலுார் பாலசுப்பிரமணியசுவாமி கோவில், சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவில், உத்திரமேரூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய மூன்று கோவில்களில் உள்ள தேர்களுக்கு பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்படும். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம், புத்தகரம், முத்துகொளக்கியம்மன் வகையறா கோவிலுக்கும் தேர் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
70 கோவில்கள், 54.1 கோடியில், புதிய அன்னதான கூடங்கள் ஏற்படுத்த உள்ளன. இதில், குன்றத்துார், சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், புதிய அன்னதான கூடம் கட்டப்பட உள்ளன.
மாங்காடு காமாட்சியம்மன் மற்றும் வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு புதிய திருமண மண்டபம் கட்டப்படும் எனவும், காஞ்சிபுரம் சித்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபம் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
41 கோவில்களில், 38.5 கோடி ரூபாய் மதிப்பில், குளங்கள் சீரமைப்பு பணிகள் நடைபெறும். இதில், காஞ்சிபுரம் ஓணகாந்தீஸ்வரர், பச்சைவண்ணர் மற்றும் பவளவண்ணர் கோவில் மற்றும் இளையனார்வேலுார் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய மூன்று கோவில்களின் குளங்களில் திருப்பணிகள் நடைபெற உள்ளன.
22 கோவில்களில், 13.5 கோடியில், சுற்றுச்சுவர் கட்டுதல், வாகன நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இதில், காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், காயரோகணீஸ்வரர் கோவிலுக்கும், சுற்றுச்சுவர் கட்டுதல், நந்தவனம், வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைக்கப்படும்.
இந்தாண்டு திருப்பணி துவக்கம்!
தமிழகத்தில் உள்ள 407 கோவில்களில், 150 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், 21 கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருப்பணிக்கு, சாத்தணஞ்சேரி விருப்பாட்சீஸ்வரர் கோவில், சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவில், உத்திரமேரூர் பாலசுப்பிரமணியசுவாமி கோவில், உத்திரமேரூர், புலிவாய் கிராமம் சொர்ணபுரீஸ்வரர் மற்றும் மகாமண்ணீஸ்ரர் கோவில், மாங்காடு மாரியம்மன் கோவில், ஆற்பாக்கம் திருவாலீஸ்வரர் கோவில், சோமங்கலம் சோமநாதீஸ்வரர் கோவில், வாலாஜாபாத் அருகே முத்தியால்பேட்டை பிரசன்ன ஆஞ்சநேயர் கோவில்.உத்திரமேரூர் அருகே அழிசூர், அருளாளீசுவரர் கோவில், மாகரல் வீற்றிருந்த பெருமாள் கோவில், காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோவில், ஒரகடம் தான்தோன்றீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், செவிலிமேடு, செல்வ விநாயகர் கோவில், தண்டலம் கைலாசநாதர் கோவில், காஞ்சிபுரம் இஷ்டசித்தி விநாயகர் கோவில், பரணிபுத்துார் தீர்த்தீஸ்வரர் கோவில், படப்பை மல்லீஸ்வரர் நல்லாட்சியம்மன் கோவில்.அய்யம்பேட்டை, சந்தவெளியம்மன் கோவில், நீர்வள்ளூர், வீற்றிருந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவில், மாங்காடு, சுங்கு விநாயகர் கோவில், ஆற்பாக்கம், ஆதிகேசவ பெருமாள் கோவில், தென்னேரி, சீனிவாச பெருமாள் கோவில், காஞ்சிபுரம்,தான்தோன்றீஸ்வரர் கோவில் மற்றும் உபமன்னீசர் கோவில்.