பதிவு செய்த நாள்
03
ஜூலை
2024
10:07
மதுரை; மதுரையில் இருந்து கேதார்நாத், கார்த்திக் சுவாமி முருகன் கோயிலில் 13 நாட்கள் சுவாமி தரிசனம் செய்து பயணிகள் மகிழ்ச்சியாக மதுரை வந்து சேர்ந்தனர்.
ஐ.ஆர்.சி.டி.சி., தென் மண்டலம் சார்பில் ‘கேதார் – பத்ரி – கார்த்திக் முருகன் கோயில் யாத்திரை’ ‘பாரத் கவுரவ் எக்ஸ்பிரஸ்’ பிரத்யேக சிறப்பு சுற்றுலா ரயில் மதுரையில் ஜூன் 20 ல் புறப்பட்டது. 13 நாட்கள் கொண்ட இப்பயணம் நேற்று நிறைவடைந்தது. மதுரையில் 70 பயணிகள், மற்ற ஊர்களில் இருந்து சேர்த்து மொத்தமாக 170 பேர் பயணித்தனர். ரிஷிகேஷ், ருத்ரபிரயாக், குப்தாகாஷி, கேதார்நாத், ஜோஷிமாத், பத்ரிநாத் ஆகிய இடங்கள் இப்பயணத்தில் இடம் பெற்றன. ஐ.ஆர்.சி.டி.சியும், உத்தரகண்ட் சுற்றுலா வாரியமும் இணைந்து இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. முதல் முறை இப்படிபட்ட சுற்றுலா ஏற்பாடு செய்திருக்கிறோம். வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் செய்வதில் சவால்கள் இருந்தாலும் பயணிகளுக்கு மன நிறைவை தரவேண்டும் என்பதற்காக ரத்து செய்யாமல் நடத்தி முடித்துள்ளோம். உத்தரகண்ட் சுற்றுலா வாரியம் இன்னும் இது போன்று பல சுற்றுலா பயணங்கள் ஏற்பாடு செய்ய ஒப்புதல் தந்துள்ளனர்.
மதுரை பக்தர்கள் கூறியதாவது: ராஜலிங்கம் பாசு பொது மேலாளர் இந்தியன் ரயில்வே டிராபிக் சர்வீஸ் குழு
தினமலர் நாளிதழுக்கு நன்றி; முதலில் குளிர் காரணமாக இச்சுற்றுலாவிற்கு செல்ல அச்சமாக இருந்தது. ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு செய்கிறார்கள் என்ற செய்தியை முதலில் தினமலர் நாளிதழில் பார்த்தவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் புக் செய்தோம். உறுதிசெய்யப்பட்ட ஹெலிகாப்டர் டிக்கெட் எங்களை உற்சாகப்படுத்தியது. நம்ம ஊர் உணவு வழங்கியது எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. கார்த்திக் சுவாமி முருகன் கோயில் குறித்த தினமலர் செய்தியை படித்து அறிந்தோம். கூட்டம் இல்லாததால் எந்த அவசரமும் இல்லாமல் தரிசனம் செய்ய முடிந்தது. கேதார்நாத் கோயிலில் கூட்டம் இருந்தாலும் 3 மணி நேரம் நின்று தரிசனம் செய்தோம். – சொக்கலிங்கம், அய்யர்பங்களா
உறுதி செய்யப்பட்ட ஹெலிகாப்டர் பயணம் கூடுதல் சிறப்பு
ஹெலிகாப்டரில் இறங்கியதும் கார்த்திக் சுவாமி முருகன் கோயிலுக்கு 10 நிமிடம் நடந்து செல்ல வேண்டியதாக இருந்தது. முதியோர்களை நாற்காலிகளில் துாக்கிச் சென்றதால் பிரச்னை இல்லை. குப்தகாசியில் இருந்து கேதர்நாத்திற்கு செல்லும் போது வானிலை அழகாக இருந்தது. கேதார்நாத்தில் வானிலை மோசமாக இருந்ததால் சிலர் அங்கேயே தங்கி மறுநாள் ஹெலிகாப்டரில் அழைத்து செல்லப்பட்டனர். கார்த்திக் சுவாமி கோயில் மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது ரம்மியமாக காட்சியளித்தது. பத்ரிநாத்திற்கு ஒரு கி.மீ நடந்து செல்ல வேண்டியதிருந்தது. வானிலை ஏற்றவாறு இருந்ததால் களைப்பு தெரியவில்லை. உறுதிசெய்யப்பட்ட ஹெலிகாப்டர் பயணம் என்பதால் இப்பயணம் கூடுதல் சிறப்பு. – ரமேஷ், ராஜபாளையம்
திருப்தியான ஆன்மிக சுற்றுலா
முதல் முறையாக வடநாட்டிற்கு இப்பயணம் மூலம் சென்றோம். கேதார்நாத் சென்றவுடன் இது வரை ஏற்படாத புது உணர்ச்சி மனதினுள்ளே ஓடியது. அங்குள்ள பனி சூழ்ந்த மலைகள், கார்த்திக் சுவாமி கோயிலை பார்த்து பிரமிப்படைந்தோம். ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் வானிலை மாற்றம் இருந்தது. ஹெலிகாப்டரில் செல்லத் தான் இப்பயணத்தில் பங்கேற்க முடிவெடுத்தோம். கார்த்திக் முருகன் கோயில் தரிசனம் பார்க்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். –- ரவி, அலங்காநல்லுார்
மகிழ்ச்சியான பயணம்
வடநாடு முழுவதும் பயணித்துள்ளோம். ஆனால் இப்படி ஒரு அழகான ஆன்மிக பயணத்தில் சென்றதில்லை. ஹெலிகாப்டரில் பயணிக்க முதலில் அச்சமாக இருந்தது. ஆனால் அங்குள்ள நிர்வாகிகளின் கவனிப்பால் சந்தோஷமான அனுபவமாக இருந்தது. மீண்டும் இது போன்ற சுற்றுலா பயணத்திற்கு வர ஆவலாக உள்ளேன். – கல்யாணி ராணி கூடல்நகர்
கேதார்நாத்திற்கு பாதுகாப்பான பயணம்
கேதர்நாத்திற்கு செல்வது எளிதான விஷயம் அல்ல. குறிப்பாக முதியோர்கள் செல்ல ஆசை இருந்தாலும் பல முறை யோசிக்க வேண்டியிருக்கும். ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு செய்ததை பார்த்ததால் தான் துணிவுடன் இப்பயணத்தில் பங்கேற்க முடிவு செய்தோம். அங்கு சென்றவுடன் வானிலை மோசமாக இருந்ததால் இரவு எங்களுக்கு தங்க ஏற்பாடு செய்து அடுத்த நாள் காலை குப்தகாசியில் இருந்து புறப்பட்டு ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றனர். பாதுகாப்பாக அழைத்து எவ்வித அசவுகரியம் இல்லாமல் வீடு திரும்பியது மன நிறைவாக உள்ளது. – லட்சுமி, அய்யர்பங்களா