பதிவு செய்த நாள்
03
ஜூலை
2024
03:07
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் 2006 ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 18 ஆண்டுகள் ஆகிறது. இரு கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பணிகளை தொடர்ந்து அடுத்த மாதம் ஆகஸ்டு 28 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 6:30 மணி முதல் 7:30 மணிக்குள் ஆதிகேசவ பெருமாளுக்கும், தொடர்ந்து, 9:00 மணி முதல் 9:40 மணிக்குள் உத்தமலிங்கேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி, நேற்று உத்தம லிங்கேஸ்வரர் கோவிலில் புதிய கொடி மரம் அமைக்கும் பணி நடைப்பெற்றது. உத்தம லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து, கொடி மரம் அமைக்கப்பட்டது. முன்னதாக ஆதிகேசவ பெருமாள் மற்றும் உத்தம லிங்கேஸ்வரர் கோவிலில் யாக சாலை அமைப்பதிற்கான முகூர்தகால் நடப்பட்டது. நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ க்கள் விஜயகுமார், செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்சினி, கோவில் செயல் அலுவலர் காளிமுத்து மற்றும் கோவில் முன்னாள் அறங்காவலர்கள், மிராசுதாரர்கள் பக்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.