திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற அரகண்டநல்லூர் அதுல்ய நாதீஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் வரும் ஆகஸ்ட் 22 ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று யாகசாலை பந்தகால் முகூர்த்த விழா நடந்தது. காலை 7:00 மணிக்கு மூலமூர்த்தி களுக்கு அபிஷேகம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மகா கணபதி ஆவாகனம், யாகசாலை பூஜைகள், திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை முடிந்து, 10:25 மணிக்கு முகூர்த்த கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்த கால் நடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், பக்தர்கள், கோவில் சிவாச்சாரியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.