அமாவாசை நிகும்பலா யாகம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2012 10:11
கும்பகோணம்: அய்யாவாடி பிரத்தியங்கிராதேவி கோவிலில், நேற்று தீபாவளியை முன்னிட்டு நிகும்பலா யாகத்தில் நூற்றுக்கணக்கான இனிப்புகள் கொட்டப்பட்டது. கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடியில் பிரத்தியங்கிராதேவி கோவில் உள்ளது. இங்கு இந்திரன் நிகும்பலா யாகம் செய்து, பிரத்தியங்கிராதேவியை வழிபட்டு நற்பலன் அடைந்தான் என புராணம் கூறுகிறது. இங்கு ஒரே மரத்தில், ஐந்து விதமான இலைகள் இருப்பதை காணமுடியும். இதையொட்டி அமாவாசை தோறும் பிரத்தியங்கிரா கோவிலில் நிகும்பலா யாகம் நடைபெறுவது வழக்கம். யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய்வற்றல் கொட்டப்படும். ஆனால் துளியும் நெடி வராது. தீபாவளி அமாவாசை என்பதால், நேற்று காலை, 10 மணிக்கு பரம்பரை அறங்காவலர் தண்டபாணி சிவாச்சாரியார் தலைமையில், 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் நடந்த நிகும்பலா யாகத்தில் நூற்றுக்கணக்கான இனிப்புகள் வாளிவாளியாக கொட்டப்பட்டது. இரண்டு மணி நேரம் நடந்த இந்த சிறப்பு தீபாவளி நிகும்பலா யாகத்தில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். முன்னதாக பிரத்தியங்கிராதேவிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. இறுதியாக மகாதீபாராதனை நடந்து, பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு யாகத்திற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தண்டபாணிசிவாச்சாரியார், சங்கர் மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்திருந்தனர்.