பதிவு செய்த நாள்
14
நவ
2012
10:11
திருக்காமீஸ்வரர் கோலிலில், வரும் 3ம் தேதி பாலாயனம் செய்து, திருப்பணியைத் துவக்குவதற்கு, தேதி குறிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில், புதுச்சேரியிலேயே அதிக பொருட்செலவில் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வில்லியனூரில், 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், 11ம் நூற்றாண்டில் தருமபால சோழனால் கட்டப்பட்டதாகும். நான்கரை ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்துள்ள இக்கோவிலில், சுயம்பு லிங்கமாக திருக்காமீஸ்வரர் அருள் பாலிக்கிறார். கோவில் வளாகத்தில், 1.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பிரமாண்டமான திருக்குளமும், பிரசித்திப் பெற்றதாகும். பழமை வாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு, 1987ம் ஆண்டு, பிப்ரவரி 5ம் தேதி, கடைசியாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதற்குப் பிறகு, கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின், இந்தக் கோவிலுக்குத் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ள அரசு, தொழில்நுட்ப மற்றும் வல்லுனர் குழுவையும் அமைத்துள்ளது. இக்குழுவின் தலைவராக, பொதுப் பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் மாந்தையன், துணைத் தலைவராக, செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரபல ஸ்தபதி முத்தையா உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் கோவிலைப் பார்வையிட்டு, 11.55 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்து, முதல்வரிடம் அளித்துள்ளனர். வரும் 3ம் தேதியன்று, திருப்பணிகளை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. கருங்கற்களைக் கொண்டு, கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள திருக்காமீஸ்வரர் கோவிலை, பழமை மாறாமல், அதேசமயம் நவீன யுக்திகளைப் பின்பற்றி புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் பிரகாரம் தற்போது இருளாகவும், போதிய காற்றோட்டம் இல்லாமலும் உள்ளது. வெளிச்சமும், காற்றும் கோவிலுக்குள் வரும் வகையில், நான்கு புறமும் "எடுத்துக்கட்டி மண்டபம் அமைக்கப்பட உள்ளது. மேல்தளத்தைத் தாங்கும் சில தூண்கள் சரிந்துள்ளது. இவை மாற்றப்பட்டு புதிய தூண்கள் வைக்கப்படும். கோவிலுக்குள் தரையில் பதிக்கப்பட்டுள்ள கருங்கற்கள் முழுவதுமாக அகற்றப்பட்டு, அவை, வெளிபிரகாரத்தில் பதிக்கப்பட உள்ளது. கோவிலுக்குள் புதிய கற்களைப் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவில் மேல் தளத்தில் தண்ணீர் ஒழுகாமல் இருப்பதற்காக, ஒவ்வொரு காலகட்டத்திலும் கொட்டப்பட்ட கலவை, தற்போது, 2 அடி உயரத்துக்கு குவிந்துள்ளது. இவை அகற்றப்பட்டு, நவீன முறையில் தளம் புதுப்பிக்கப்பட உள்ளது. சுற்றிலும் கொடுங்கு சுவர் அமைத்து, 34 நந்தி சிற்பங்கள் புதிதாக அமைக்கப்படுகிறது. கோவிலின் முகப்பு மண்டபம் புதிதாக கட்டப்படுகிறது. மேலும், 67 அடி உயரமுள்ள ராஜ கோபுரத்திலும், 97 அடி உயரமுள்ள தெற்கு கோபுரத்திலும் சேதமடைந்துள்ள சுதை சிற்பங்கள் அனைத்தும் சீரமைக்கப்படும். தெற்கு கோபுரத்தில் இடி தாக்கியது உள்ளிட்ட சில காரணங்களால் விரிசல் விட்டுள்ளது. இந்த கோபுரத்தின் அடித்தளம், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலிமைப்படுத்தப்பட உள்ளது. கோவில் குளத்தில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி புதுப்பிக்கப்பட உள்ளது. குளக்கரையில் உள்ள ஆடை மாற்றும் மண்டபங்களையும், நீராழி மண்டபத்தையும் பழமைமாறாமல் புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கோவில் தூண்கள், சுவர்கள், மேல்தளத்தின் கூரை என, 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், "சான்ட் பிளாஸ்ட் என்ற முறையில், பழமையை மீட்டெடுக்கும் வகையில் சுத்தம் செய்யப்பட உள்ளது. நால்வர் சன்னதி, நர்த்தன கணபதி சன்னதிகள் இடம் மாற்றப்பட உள்ளது. சிவன், அம்மன் துவஸ்தம்பங்களும், அனைத்து கதவுகளும் புதிதாக அமைக்கப்படுகிறது. கோவில் முழுவதும் 25 லட்சம் ரூபாய் செலவில் மின்சார வசதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு 11.55 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், திருப்பணி செலவுகள் 20 கோடி ரூபாயை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.