பதிவு செய்த நாள்
14
நவ
2012
10:11
திருச்செங்கோடு: கைலாசநாதர் கோவிலில் உள்ள சிவகாமியம்மை உடனமர் சிதம்பரேஸ்வரர் அறுபத்துமூவர் மற்றும் தொகையடி உற்சவமூர்த்திகளுக்கு, வரும், 23ம் தேதி திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்கிறது. திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் உபகோவிலான சுகுந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவிலில் சிவகாமியம்மை உடனாய சிதம்பரேஸ்வரர், 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களுடன் சேர்த்து புதிதாக, 80 உற்சவ மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா, நவம்பர், 23ம் தேதி நடக்கிறது. 19ம் தேதி காலை, 5 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து திருவிளக்கு, புனிதநீர், விநாயகர் அலைமகள் வழிபாடு, வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம் நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பர், 20ம் தேதி நவகிரஹ ஹோமம் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு திருப்பலியிடுதல், புற்றுமண் எடுத்தல், நிலத்தேவர் வழிபாடும், 21ம் தேதி காலை, 6 மணிக்கு, அறுபத்து மூன்று நாயன்மார்கள் மற்றும் தொகையடி உற்சவ மூர்த்திகள் அர்த்தநாரீஸ்வரர் திருமலை கிரிவலம் வந்து, கைலாசநாதர் கோவிலை அடைக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு முளைப்பாளிகை இடுதல், காப்பணிவித்தல், கலசங்கள் அலங்கரித்தல், முதல் கால வேள்வி பூஜை நடக்கிறது. 22ம் தேதி காலை, 6 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும் நடக்கிறது. 23ம் தேதி காலை, 6 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை, காலை, 7 மணிக்கு கலசங்கள் வேள்வி சாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, புதிய உற்சவ மூர்த்திகளுக்கு புனத நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு சொற்பொழிவு, வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.