பதிவு செய்த நாள்
09
ஜூலை
2024
04:07
திருக்கோஷ்டியூர்; மாவட்டத்தின் முக்கியமான ஆன்மீக சுற்றுலாத்தலமான திருக்கோஷ்டியூரில் கோயில் குளத்தை முழுமையாக பராமரித்து புனரமைக்கவும், அடிப்படை வசதிகளுடன் அழகுபடுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கு கிடப்பிலுள்ள கோயில் குளம் மேம்பாடு திட்டத்தை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் 108 வைணவத் தலங்களில் சிறப்பான இடத்தை பெற்றது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர் வருகை உள்ளது. இக்கோயில் முன்பாக உள்ளது திருப்பாற்கடல் எனப்படும் கோயில் குளம். மிகவும் பழமையான இந்த குளம் அவ்வப்போது சிறு,சிறு பராமரிப்புகள் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இருப்பினும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.
தூர்ந்து போன வரத்து கால்வாய்; மூன்று ஆண்டுகளுக்கு முன் புதிய வரத்துக்கால்வாய் மூலம் நீர்வரத்து ஏற்பட்டு பெருகியது. இருப்பினும் தொடர்ச்சியாக குளத்தில் நீர் இருப்பதில்லை. மணிமுத்தாற்றில் நீர் வரத்து ஏற்பட்டு பிரமாணம்பட்டி கண்மாய் பெருகினால் அங்கிருந்து முதலாம் எண் மடையிலிருந்து நேரடியாக இக்குளத்திற்கு பெருமாள் கால்வாய் மூலம் நீர்வரத்து ஏற்படும். இக்கால்வாய் காலப்போக்கில் தூர்ந்து போய் ஆக்கிரமிப்புக்குள்ளாகி விட்டது. இதனால் பிராமணம்பட்டியிலிருந்து வேறு பல கண்மாய்களுக்கு சென்ற பின்னர் வரத்துக்கால்வாய் மூலம் குளத்திற்கு நீர் வரத்து ஏற்படுகிறது. இந்த கால்வாயின் சில பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் குளத்திற்கு வேகமாக நீர் வரத்து கிடைப்பதில்லை.
சேதமான படித்துறைகள்; மேலும், குளத்தில் முறையாக தூர் வாராததால் நீர்நிரப்பினாலும் விரைவாக மண்ணில் உறிஞ்சப்படுகிறது. இதனால் சில மாதங்களில் குளம் வறண்டு விடுகிறது. இதனால் தரைத் தளத்தை சரியான களிமண் நிரப்பி நீர் தேங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. மேலும் குளத்தின் உள்ள உள் கட்டு கட்டினால் குறைந்த அளவிலான நீர் எப்போதும் தேங்கி நிற்க முடியும். மண் சரிவும் ஏற்படாது. குளத்தில் கிழக்கில் 3 படித்துறைகள் உள்ளன. அதில் யானைப்படித்துறை முற்றிலமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. யானை இறங்கி குளிக்க பயன்பட்டது. தற்போது யானை இல்லாததால், இப்படித்துறையை தடுப்புச்சுவராக மாற்றி பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். மேற்கில் உள்ள 3 படித்துறைகளில் சேதமடைந்த ஒரு படித்துறையை சீரமைக்க வேண்டும்.
கிடப்பில் குளம் மேம்பாடு திட்டம்: இந்த குளத்தை புனரமைக்கை சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. கோயில் சுற்றுச்சுவரை பலப்படுத்தி, படித்துறைளை சீரமைக்கவும், வரத்துக்கால்வாய்களை தூர் வாரவும் திட்டமிடப்பட்டது. மேலும் குளத்தை சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, பக்தர்கள் ஓய்வெடுக்க வசதியாக கிழக்கு புறத்தில் டைல்ஸ் தளம், கற்கலாளான இருக்கைகள், குளத்தைச் சுற்றிலும் ஒளி விளக்குகள், அழகிறய செடிகள் நிறுவ திட்டமிடப்பட்டது. ஆனால் இத்திட்டம் நிதி அனுமதி பெறாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஆவ்மீக சுற்றுலாத்தலமாக இக்கோயில் முன்பாக உள்ள இக்குளம் புனரமைக்கப்பட்டு, பூங்கா வசதிகளை ஏற்படுத்தினால் இப்பகுதி பக்தர்களை வெகுவாக கவரும். திருகு்கோஷ்டியூர் நிலத்தடி நீர் வளம் பெறும்.