திருநெல்வேலி ; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவில் தேரோட்டம் தற்போது விமரிசையாக நடந்தது.
திருநெல்வேலி, ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தமிழகத்தில் சிவன் ஆருத்ரா தரிசன நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான தாமிரசபை நெல்லையப்பர் கோயிலில் உள்ளது. பஞ்சசபைகளில் ஒன்றான தாமிரசபையை போன்று, தாமிரபரணிக்கரையில் ராஜவல்லிபுரத்தில் உள்ள அழகிய கூத்தர் ஆலயமும் சிறப்புடையது. வயல்வெளிகளில் அமைந்துள்ள இந்த தலம், மகாவிஷ்ணு, அக்னிபகவான், அகத்தியர், வாமதேவரிஷி, மணப்படைவீடு அரசன் ஆகியோருக்கு நடன தரிசனம் கொடுத்த சிறப்புடைய தலமாகும். இங்கு செப்புதகடுகளால் வேயப்பட்ட கூரையை கொண்ட கோயில் கொண்டுள்ளார். அழகிய கூத்தர் ஆலயம் என்றழைக்கப்படும் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. 9ம் திருவிழாவான இன்று காலை சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின் தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.