பதிவு செய்த நாள்
11
ஜூலை
2024
12:07
பெ.நா.பாளையம்,; கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை மீது ராமானுஜர் வருகை தந்த திருத்தலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் கொண்ட பாலமலை திருக்கோவிலில் ரங்கநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனூர் செல்லும் வழியில், 11 கி.மீ., தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு ரங்கநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு, காரை வனமாக இருந்த இப்பகுதியில் வசித்த மக்கள், பசு மாடுகளை வளர்த்து வந்தனர். அதில், ஒரு பசு தினமும் காரை வனத்துக்குள் புகுந்து, அங்கிருந்த ஒரு காரை மரத்துக்கு அடியில், பாலை சுரந்து வந்தது. இதை பார்த்த பசுவின் உரிமையாளர், கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் அங்கு சென்று பார்த்த போது, ஒலித்த அசரீரி நான் இங்கு அரங்கனாக எழுந்தருளி உள்ளேன் என்றது. இதை தொடர்ந்து, அங்கு சுயம்புவாக இருந்த பெருமாளை, பக்தர்கள், சிறிய குடில் அமைத்து வழிபட தொடங்கினர். நாளடைவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரங்கநாதருக்கு சிறிய கோவில் கட்டி வழிபட வேண்டும் என, விரும்பினர். இந்நிலையில், ஒரு நாள் அப்பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. கிராம மக்கள் அனைவரும் அங்கு சென்று பார்த்த போது, வெடிச்சத்தம் கேட்ட ஈசானிய மூலையில் பாறைகளும், வாயு மூலையில் மண்ணும் கிடைக்கும். அதை கொண்டு கோவில் கட்டுங்கள் என, அசரீரி ஒலி எழுப்பியது. அதன்படி, அப்பகுதியில் கிடைத்த பாறைகளையும், மணலையும் கொண்டு பக்தர்கள் கோவில் எழுப்பினர். இக்கோவில் பல்வேறு சிறப்புகளை கொண்டது. கோவிலில் பக்தர்கள் குழந்தை வரம், மாங்கல்ய வரம் வேண்டி கயிறு கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள். கோவிலுக்கு உள்ளே நுழைந்த உடன் ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அர்த்த மண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம். மகா மண்டபத்தில் ஊஞ்சலில் ரங்கநாதர் உற்சவமூர்த்தியாய், தாயார்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவில் உள்பகுதியில் மூலவர் ரங்கநாதர் சுமார், 4.5 அடி உயரத்தில் எப்போதும் மலர் மாலைகள், துளசி மாலைகள் அணிந்து காட்சியளிக்கிறார். மூலவருக்கு வடக்கு பகுதியில் பூங்கோதை தாயாரும், தெற்கு பகுதியில் செங்கோதை அம்மன் தாயாரும், தனித்தனி சன்னதியில் நின்றபடி அருள் புரிகின்றனர். கோவிலின் பின்புறம் தும்பிக்கையாழ்வார், இராமானுஜர், காளியண்ணன் சாமி ஆகியோர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாலித்து வருகின்றனர். மகா மண்டபத்தை ஒட்டி ஆஞ்சநேயர், தன்வந்திரி சன்னதிகள் உள்ளன. கோவிலின் பின்புறத்தில் தல விருட்சமாக காரை மரம் உள்ளது. தும்பிக்கை ஆழ்வார் சன்னதிக்கு பின்புறம் உள்ள பூவரச மரத்தில் பக்தர்கள் குழந்தை வரம், மாங்கல்ய வரம் வேண்டிய கயிறு கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள். கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம், 10 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி தேரோட்டம் சிறப்பு வாய்ந்தது. மேலும், புரட்டாசி சனிக்கிழமைகள், கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி, பொங்கல் திருநாளில் சிறப்பு வழிபாடு நடைபெறும். தினமும் காலை, 6.00 மணி முதல் இரவு, 7.00 மணி வரை நடை திறந்து இருக்கிறது. இங்கே வரலாற்று சிறப்புமிக்க சுனை மற்றும் தெப்பக்குளம் உள்ளது. மூன்று கால பூஜை நடக்கிறது. கோவில் அடிவாரத்தில் இருந்து செல்ல ஜீப் வசதி உள்ளது. காலை, மாலை அரசு பஸ் இயங்கி வருகிறது. மலைப்பாதையில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், அதிகாலை, மாலை நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்ப்பது நல்லது.