பதிவு செய்த நாள்
12
ஜூலை
2024
10:07
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா நடப்பதையொட்டி, கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன் பாளையத்தில் சொக்கலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று காலை நடக்கும் கும்பாபிஷேக விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் கடந்த ஏழாம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று கும்பாபிஷேக விழாவை ஒட்டி அதிகாலை, 3.00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, 108 மூலிகை பொருட்கள், ஹோமம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. காலை, 5.00 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 5.30 மணியிலிருந்து, 6.30 மணிக்குள் ராஜகோபுரம் முதல் அனைத்து விமானங்கள், பரிவார மூர்த்திகளுக்கும் சமகாலத்தில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, அன்னதானம், காலை, 10.00 மணிக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தச தரிசனம், தீபாராதனை, பிரசாத விநியோகம் நடக்கிறது. விழாவையொட்டி, பெரியநாயக்கன்பாளையம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, தேங்காய், பழம், பட்டாடைகள், மலர்கள், மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை சீர்வரிசையாக சொக்கலிங்கேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.