பதிவு செய்த நாள்
12
ஜூலை
2024
05:07
உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பாக்கத்தில் பழமையான கெங்கையம்மன் கோவில் உள்ளது. கெங்கையம்மனை அப்பகுதியினர் காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
சிறிய அளவிலான இக்கோவிலுக்கு மண்டபத்துடன் கூடிய விமான கோபுரம் கட்டி வழிபட அப்பகுதியினர் தீர்மானித்தனர். அதன்படி, சில ஆண்டுகளாக இக்கோவில் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. கோவில் திருப்பணி நிறைவு பெற்றதையடுத்து இன்று கும்பாபிஷேகம் விழா நடந்தது. முன்னதாக நேற்று காலை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை நடந்தது. மாலையில் கும்ப அலங்காரம் மற்றும் முதற்காலயாக பூஜைகளும் அதை தொடர்ந்து சிலைகள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 10:00 மணிக்கு கோபுர கலசம் மீது புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அரும்புலியூர் ஊராட்சி தலைவர் வெங்கட்ராமன் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., சுந்தர், சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்பகுதியைச் சேர்ந்த ரவி, சுப்பிரமணி, மதன்ராஜ் உள்ளிட்டோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.