பதிவு செய்த நாள்
13
ஜூலை
2024
10:07
தொண்டாமுத்தூர்; பேரூரில், பெரியபுராணம் பேரூரை வெளியீட்டின், வைர விழாவையொட்டி, பெரியபுராணம் பேரூரை நூல், களிற்றின் மீது வைத்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
12ம் நூற்றாண்டில், சேக்கிழார் பெருமான் எழுதிய பெரியபுராணத்திற்கு, 1948ம் ஆண்டு, சிவக்கவிமணி சுப்பிரமணி என்பவர் பேரூரை நூலை எழுதி, வெளியிட்டார். இந்நிலையில், அரன் பணி அறக்கட்டளை சார்பில், பெரியபுராணம் பேரூரை வெளியீட்டின், வைர விழா, பேரூரில் நேற்று நடந்தது. இதில், நேற்று காலை, 1948ம் ஆண்டு வெளியிட்ட பெரியபுராணம் பேரூரையின் பிரதியை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வைத்து பூஜை செய்தபின், களிற்றின் மீது வைத்து, மேளதாளத்துடன், தேர் ரத வீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, நடராஜ பெருமான் சன்னதியில் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சிவக்கவிமணி சுப்பிரமணி எழுதிய பெரியபுராணம் பேரூரையின் சிறப்புகள் குறித்து பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். இதில், பேரூராதினம் மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், அரன் பணி அறக்கட்டளை தலைவர் தியாகராஜன், புலவர் சென்னியப்பனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.