விழுப்புரம் கலைஞர் நகரிலுள்ள சக்திவிநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அஷ்ட காலபைரவர் சன்னதி புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் நடந்தது. பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமங்களுடன் தொடங்கியது. தொடர்ந்து, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு ரக்ஷாபந்தனம், முதல் கால யாக பூஜை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், புன்யாக வாசனம், இரண்டா-ம் கால யாக பூஜையும், தத்துவார்ச்சனையும், காலை 9:00 மணிக்கு தீபாராதனை, யாத்ராதானமும் நடந்தது. தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடாகி, புனித நீர் கொண்டுவந்து, காலபைரவர் சன்னதி கோபுர கலசத்திற்கும், பிறகு மூலவர் காலபைரவருக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில், விழுப்புரம் மற்றும் சுற்று பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.