அயோத்தி செல்ல முடியாமல் மதுரை விமான நிலையத்தில் பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜூலை 2024 11:07
அவனியாபுரம்; பதிவாகாத டிக்கெட்டுகளால் அயோத்தி செல்ல முடியாமல் மதுரை விமான நிலையத்திலிருந்து 106 பக்தர்கள் மீண்டும் சேலம் திரும்பினர். சேலத்தை சேர்ந்த 106 பக்தர்கள் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக காசி, அயோத்தி செல்ல சேலத்திலுள்ள டிராவல்சில் ஒருவருக்கு ரூ. 29 ஆயிரம் வீதம் செலுத்தினர். நேற்று காலை 106 பயணிகளும் டிராவல்ஸ் மேனேஜர் ராஜாவுடன் மதுரை விமான நிலையம் வந்தனர். அவர்களது டிக்கெட்டுகளை இண்டிகோ நிறுவன அதிகாரிகள் சோதனை செய்து, இந்த டிக்கெட்டுகள் கம்ப்யூட்டரில் பதிவாகவில்லை எனக் கூறி பயணிகளை திருப்பி அனுப்பினர். இது குறித்து பயணிகள் ராஜாவிடம் தெரிவித்தனர். அவர் சேலத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திடம் பேசினார். பின்பு அவர் பயணிகளிடம், டிக்கெட் புக்கிங்கில் கம்ப்யூட்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் இவ்வாறு நடந்து விட்டது. ஜூலை 18 அன்று மீண்டும் டிக்கெட் வாங்கி அயோத்தி செல்ல ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். அவர் கொடுத்த உறுதியை அடுத்து அனைவரும் மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றனர்.