பதிவு செய்த நாள்
13
ஜூலை
2024
12:07
மைசூரு; ஆஷாடா கன்னட மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள், 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்து, அம்மனை தரிசனம் செய்தனர்.
கர்நாடகாவில் ஆஷாடா கன்னட மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் மிகவும் விசேஷம். அதுவும் ஆஷாடா மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மைசூரு சாமுண்டிஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கும். இந்த வகையில், இந்தாண்டின் ஆஷாடா மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான நேற்று, சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகம் முழுதும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கருவூலத்தின் நுழைவு பகுதியில், ‘அம்மா’ என்று மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கோவில் கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு அதிகாலையே அபிஷேகம் செய்யப்பட்டு, நீல வண்ண பட்டுப்புடவை உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதல், இரவு வரை பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். சாமுண்டி மலை அடி வாரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. லலித் மஹால் ஹெலிபேட் பகுதியில் இருந்து, மலை உச்சிக்கு செல்வதற்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது. அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 3 மணி முதல் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். நீண்ட வரிசையில் நிற்க முடியாதவர்கள், 100, 300 ரூபாய் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்தனர். அவர்களும் 2 மணி நேரம் காத்திருந்தனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.