கடந்த ஜூன், 10ம் தேதி மங்கள இசையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. விழாவையொட்டி, விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல், வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், மாகாளியம்மன், பாலமுருகன் விக்ரகங்களுக்கு நூதன பிம்பசுத்தி, திருமஞ்சனம், விமான கலச பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல், மங்கள ஆரத்தி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜையில் மண்டபார்ச்சனை, வேதிகா அர்ச்சனை, மூல மந்திர ஹோமம், 108 திரவிய ஹோமம் நடந்தன. சிவாச்சாரியார்கள் தீர்த்த கலசங்களுடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து, கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு அலங்காரம், அபிஷேக பூஜைகள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்து இருந்தனர்.