பதிவு செய்த நாள்
16
ஜூலை
2024
01:07
சின்னமனூர்; குச்சனுார் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப் பெருந்திருவிழா இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. திருப்பணிகள் நடைபெறுவதால் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கென்று தனி கோயில் தேனி மாவட்டம் குச்சனூரில் மட்டுமே உள்ளது. இங்கு சனீஸ்வரபகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் இவருக்குள் ஐக்கியம் என்பதால், இங்கு மூலவர் ஆறு கண்களுடன் உள்ளார். சனீஸ்வர பகவான் இரகு வம்சத்தில் பிறந்தவர் என்பதால், நெற்றியில் திருநாமம் தரித்தும், ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சிவபெருமானுக்கு அடுத்து சனீஸ்வர பகவான் திகழ்வதால் கிரீடத்தில் விபூதி பட்டையும் அணிந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடைபெறும் மூன்றாவது சனிக்கிழமை, பெருந்திருவிழாவாக நடைபெறும். கடந்தாண்டு ஜூலை 22 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி நடைபெற்றது. வழக்கமாக ஆடி மாதம் முதல் நாள் கொடியேற்றம் நடைபெறும். நாளை ( ஜூலை 17 ) ஆடி முதல் தேதி என்பதால் கொடியேற்றம் நடைபெற வேண்டும். ஆனால் திருப்பணி வேலைகள் துவங்கி இருப்பதால் கொடிமரம் அகற்றப்பட்டுள்ளது. எனவே கொடியேற்றம் செய்ய முடியாது. மேலும் ஆடிப் பெருந் திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளாக மூன்றாவது வாரம் பெரும் திருவிழா, , சனீஸ்வர பகவானுக்கும், நீலாதேவிக்கும் திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சன காப்பு சாத்துதல், முளைப்பாரி ஊர்வலத்துடன், சக்தி கரகம் கலக்குதல் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில், " வழக்கமாக நடைபெறும் ஆடிமாத திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயில் திருப்பணி வேலைகள் துவங்கி நடைபெற்று வருகிறது. ரூ 1 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் உபயதாரர்களால் பணிகள் நடைபெறுகிறது. திருப்பணி வேலைகள் துவங்கியுள்ளதால் கொடி மரம் அகற்றப்பட்டுள்ளது. ஐதீகம், சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால், திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் வழக்கம் போல ஆடி மாதம் பக்தர்கள் கோயிலிற்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய எந்த தடையும் இல்லை. வழக்கமான பூஜைகள் நடைபெறும் " என்றனர்.