பதிவு செய்த நாள்
16
ஜூலை
2024
05:07
பாலக்காடு; திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று ‘யானையூட்டு’ விழா நடந்தது.
கேரள மாநிலம், திருச்சூரில் பிரசித்தி பெற்ற வடக்குநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆடி மாதம் யானைகளுக்கு உணவு வழங்கும் ‘யானையூட்டு நிகழ்ச்சி, சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு ‘யானையூட்டு விழா இன்று நடந்தது. இதையொட்டி, தந்திரி புலியன்னூர் சங்கரநாராயணன் நம்பூதிரி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பிரம்மாண்ட ஹோமம் நடத்தப்பட்டது. இதில், 12 ஆயிரம் கிலோ தேங்காய், வெல்லம், ஆவல் தலா இரண்டாயிரம் கிலோ, 500 கிலோ மலர், 60 கிலோ எள், 50 கிலோ தேன், எலுமிச்சை, கரும்பு, மூவாயிரம் கிலோ நெய் பயன்படுத்தப்பட்டன. காலை, 7:00 மணிக்கு கஜ பூஜையும், தொடர்ந்து, ‘யானையூட்டு நிகழ்ச்சியும் நடந்தன. ‘யானையூட்டு நிகழ்ச்சியை கோவில் மேல்சாந்தி செறுமொக்கு ஸ்ரீராஜ் நாராயணன் நம்பூதிரி துவக்கி வைத்தார். மேற்கு கோபுர நடை வாயிலாக நுழைந்த, 70 யானைகள் கோவில் வளாகத்தில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. அவற்றுக்கு, 500 கிலோ அரிசியால் சமைத்த உணவுடன், மஞ்சள், நெய், வெல்லம் சேர்ந்து வழங்கி கொண்டாடினர். இதுதவிர, அன்னாசி, வெள்ளரி, தர்பூசணி, பழம் என எட்டு வகையான பழங்களும் யானைகளுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்குப் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், கோவிலில் சுற்று விளக்கு ஏற்றுதல், நிறமாலை தரிசனம், தீபாராதனை மற்றும் சிறப்பு பகவதி சேவை ஆகியவை நடைபெற்றன.