பதிவு செய்த நாள்
17
ஜூலை
2024
12:07
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப்பெருந்திருவிழாவில் இன்று அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழா பாதுகாப்பிற்கு 150 போலீசார் குவிக்கப்பட்டுள்ளர்.
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா ஜூலை 8 ல் கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் திருவிழா நடந்து வருகிறது. தினமும் இரவில் அம்மன் சிம்மம், ரிஷபம், அன்னபட்ஷி, குதிரை, யானை, மின் விளக்கு, பூப்பல்லாக்கு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார். நேற்று முன்தினம் அம்மன் தென்கரை வணிகவைசிய குல அபிவிருத்தி சங்கத்தில் எழுந்தருளி, குதிரை வாகனத்தில் இரவில் வீதி உலா சென்றார்.நேற்று 9 ம் நாள் திருவிழாவில் நேற்று அதிகாலை 12:00 மணியிலிருந்து மதியம் 12:00 வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் முன்பு நடப்பட்ட கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றி அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து மாவிளக்கு, ஆயிரம் கண்பானை, முளைப்பாரி எடுத்து அம்மனை வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தனர். இதனையொட்டி பெரியகுளம் டி.எஸ்.பி., குரு வெங்கட் தலைமையில், 3 டி.எஸ்.பி., க்கள், 8 இன்ஸ்பெக்டர்கள், 41 எஸ்.ஐ., மற்றும் சிறப்பு எஸ்.ஐ., க்கள், 50 போலீசார், 52 ஊர்க்காவல் படையினர் நேற்று முதல் நாளை (ஜூலை 18) மாலை வரை 24 மணி நேரம் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவிழா பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.