விழுப்புரம் அடுத்த மரகதபுரம் கிராமத்தில் மொகரம் தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. இந்துக்களும், முஸ்லிம்களும் 10 நாட்கள் விரதமிருந்து, விழாவில் ஒற்றுமையாக பங்கேற்றனர். விழாவுக்காக, தேர்முட்டித் தெருவில் உள்ள ஹசேன் உசேன் பாவா தர்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. திருவிழா நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு துவங்கியது. 11:30 மணியளவில் தர்காவின் உள்ளே முஸ்லிம்களும், அய்யப்ப பக்தர்களும் மாலை அணிந்தபடி வெற்றிலை, பாக்கு, பழம், சர்க்கரை பொங்கல் வைத்து படைத்து வழிபட்டனர். இரவு 11:40 மணிக்கு, முஸ்லிம்கள் மேளதாளத்துடன், பெண்ணையாற்றுக்கு சென்று புனித நீராடிவிட்டு மீண்டும் தர்காவிற்கு வந்தனர். பின், தர்கா முன்பு தீக்குண்டம் ஏற்படுத்தி, இரவு 12:00 மணியளவில் முஸ்லிம் பெரியவர் தீக்குண்டம் இறங்கினார். அவரைத் தொடர்ந்து, இரு மதத்தினரும், தீமிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர். விழாவில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், திருவண்ணாமலை, வேலுார், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இந்து, முஸ்லிம்கள் பங்கேற்றனர்.