பதிவு செய்த நாள்
17
ஜூலை
2024
03:07
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உடுப்பியில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. இதில் ஒன்று அனந்த சயன கோவில். அந்த கோவிலை பற்றி பார்க்கலாம். உடுப்பியின் கார்கலா நகரில் உள்ளது அனந்த சயன கோவில். 15ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், அனந்த பத்மநாபா சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் அனந்த பத்மநாபா, சேசாயி அனந்தேஸ்வரா கோவில் என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் விஷ்ணு சயன நிலையில் இருப்பது போன்று, இக்கோவிலிலும் விஷ்ணு சிலை சயன நிலையில், ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. இக்கோவில் முன்பு ஜெயின் கோவிலாக இருந்தது. இங்கு வந்த சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு, ஜெயின் மன்னர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது விஷ்ணு கோவில், இங்கு இருந்தால் மட்டுமே தங்குவேன் என, ஜகத்குரு ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகள் கூறியதால், மன்னர்கள் என்ன செய்வதென்று யோசித்தனர். அப்போது நெல்லிக்கரை என்ற இடத்தில் ஓடும் சிறிய ஆற்றில் அனந்த பத்மநாப சுவாமியின் சிலை மூழ்கி இருப்பது பற்றி மன்னர்களுக்கு, சுவாமிகள் தெரிவித்தார்.
அந்த ஆற்றுக்கு சென்ற மன்னர்கள், அங்கு மூழ்கி இருந்த விஷ்ணு சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினர். கோவிலின் கருவறை செப்புத்தகடால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் சுவரில் பல தெய்வங்களின் வடிவங்கள் பதிக்கப்பட்டுள்ளன. கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டடக் கலையை பார்த்து பிரமிக்கின்றனர். பழங்கால கோவில் என்பதால் இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. சயன நிலையில் விஷ்ணு.
இடம்: அனந்த சயன கோவில், கார்கலா, உடுப்பி.
செல்வது?; பெங்களூரில் இருந்து கார்கலா 358 கி.மீ., துாரத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து பஸ், ரயில்கள் இயக்கப்படுகின்றன. விமானத்தில் சென்றால் மங்களூரு விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோவிலுக்குச் செல்லலாம்.