பதிவு செய்த நாள்
17
ஜூலை
2024
03:07
மைசூரு நகரின் மணி மகுடமான சாமுண்டி மலையில் குடிகொண்டுள்ள சாமுண்டீஸ்வரியை பற்றி தெரியாதவர்களே இல்லை. ஆனால் அவரது ஏழு சகோதரிகளில் ஒருவரான சிக்கதேவம்மா குறித்து பலருக்கும் தெரியாது. இவரும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதாக ஐதீகம். மைசூரின் சாமுண்டீஸ்வரி அம்பாளுக்கு கர்நாடகா மட்டுமல்ல, உலகம் முழுதும் பக்தர்கள் உள்ளனர். தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். அதிக கூட்டத்தால் அம்பாளை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் ஏராளம். சாமுண்டீஸ்வரிக்கு ஏழு சகோதரிகள். அவர்களில் சிக்க தேவம்மாவும் ஒருவர் என்பது பலருக்கும் தெரியாது.
புண்ணிய தலம்; சிக்கதேவம்மாவும் கூட மலை மீது அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஹெச்.டி., கோட்டேக்குச் செல்வோர், சிக்கதேவம்மாவை தரிசிக்காமல் சென்றது இல்லை. மைசூரின் ஹெச்.டி., கோட்டேவில் உள்ள மலை, பிரசித்தி பெற்ற புண்ணிய தலமாக விளங்குகிறது. பசுமை அதிகம் உள்ள அழகான சுற்றுச்சூழலில் அமர்ந்து, சுற்றுப்புற மக்களால் சிக்கதேவம்மாவும் பூஜிக்கப்படுகிறார். தினமும் பூஜைகள் நடக்கின்றன. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும். தேவர்களையும், பூலோக மக்களையும் வாட்டி வதைக்கும் அரக்கனை வதம் செய்ய, ஏழு அவதாரங்கள் எடுத்து, பார்வதி தேவி பூமிக்கு வருகிறார். இவர் தெற்கு முகமாக தென்படும் உயரமான ஏழு மலைகளில் குடிகொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.
அரக்கர்கள்; சிக்கதேவம்மா மலையில் ஆயிரக்கணக்கான அரக்கர்கள் குவிந்திருந்தனர். முதலில் இவர்களை பார்த்து அஞ்சிய சிக்கதேவம்மா, தப்பிச் சென்று மலை மீதுள்ள குகையில் ஒளிந்து கொண்டார். அதன்பின், அரக்கர்களை வதம் செய்து, அதே மலையில் குடிகொண்டாராம்.
சுரங்கப்பாதை; கிடைத்துள்ள தகவலின்படி, சிக்கதேவம்மா மலைக்கும், சாமுண்டீஸ்வரி மலைக்கும் இணைப்பு ஏற்படுத்தும் சுரங்கப்பாதை உள்ளதாம். இதற்கு சாட்சியாக, சுரங்கப்பாதை இப்போதும் தென்படுகிறது. மரம், செடி, கொடிகள் படர்ந்து சுரங்க வாயில் மூடப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் ஒரு சர்ப்பம் உள்ளது. எனவே யாரும், இந்த பகுதிக்கு செல்வது இல்லை. சாமுண்டீஸ்வரி அரக்கர்களை வதம் செய்ய, யுத்தம் நடத்தியபோது, அவருக்கு சகோதரிகள் உதவியாக இருந்தனர். சிக்கதேவம்மாவும் உதவியாக நின்றிருந்தார். இதற்கு முன்பு சாமுண்டி மலை, மஹாபலா மலையாக இருந்தது. சிக்கதேவம்மாவும் சக்தி வாய்ந்த பெண் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை தரிசனம் செய்து வணங்கினால், விரும்பியது கிடைக்கும் என்பது, மக்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறினால், அம்பாளை வழிபட்டு பிரார்த்தனையை நிறைவேற்றுவர். – நமது நிருபர் –