தேவிபட்டினம் நவபாஷாணத்தில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2024 10:07
தேவிபட்டினம்; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் நடைபாதை மீது மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடலுக்குள் உள்ள நவக்கிரகங்களை வழிபட செல்லும் பக்தர்கள் நடைமேடை வழியாக சுற்றி வந்து வழிபடுகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவக்கிரகங்களுக்கு செல்வதற்கு அமைக்கப்பட்ட நடைபாதையின் மேல், தூண்கள் அமைக்கப்பட்டு மங்களூர் ஓடுகள் மூலம், மேற்கூரை அமைக்கும் பணிக்கு ரூ 57 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி உள்ளன. இதனால், பக்தர்கள் வெயில் நேரங்களிலும் வெப்ப தாக்குதல் இல்லாமல் சென்று வரும் நிலை ஏற்படும். நடைபெற்று வரும் பணிகளை இந்து அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் பழனி குமார், செயல் அலுவலர் நாராயணி, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் ஆகியோ ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், நடைபெறும் கட்டுமான பணிகள் முறையாகவும், தரமாகவும் நடைபெறுவதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளன.