பதிவு செய்த நாள்
20
ஜூலை
2024
05:07
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள், 5 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். பவுர்ணமி நாட்களில், 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அம்மலையை ஞானிகள், சித்தர்கள், மகான்கள், கண்ணுக்கு புலப்படாமல் கிரிவலம் செல்கின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த நேரத்தில் கிரிவலம் சென்றால், அருணாசலேஸ்வரரரின் அருளாசியும், ஞானிகள், சித்தர்கள், மகான்களின் ஆசியும் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இதன்படி ஆடி மாத பவுர்ணமி திதி இன்று மாலை, 6:10 மணி முதல், இன்று மாலை, 4:51 மணி வரை உள்ளதால், அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். சாரை சாரையாக கிரிவலம் சென்ற நிலையில், 5 மணி நேரம் காத்திருந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.