பதிவு செய்த நாள்
23
ஜூலை
2024
05:07
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடம் தோறும் ஆடி பிரம்மோற்ஸவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இந்த நாட்களின் போது சுவாமி பரங்கி நாற்காலி,பல்லக்கு,குதிரை,சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்தாண்டுக்கான விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது .இதனைத் தொடர்ந்து விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் கடந்த 18ம் தேதியும், 21ம் தேதி தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.22ம் தேதி விழாவின் நிறைவு நிகழ்ச்சியான தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக வீர அழகர் வெள்ளை குதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.அங்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றன. மாலை சக்கரத்தாழ்வாருக்கு மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. மண்டகப்படியில் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.இதனைத் தொடர்ந்து நேற்று காலை 7;00 மணிக்கு வீர அழகர் பட்டத்தரசி கிராம மண்டகப்படியிலிருந்து அண்ணாமலை நகர்,ராம் நகர்,அன்பு நகர், சிவகங்கை ரோடு, பிருந்தாவன அக்ரஹாரம்,அழகர் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி உலா சென்று கோயிலுக்கு வந்தடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன்,அர்ச்சகர் கோபி மாதவன்(எ) முத்துச்சாமி ஆகியோர் செய்திருந்தனர்.