27 ஆண்டுகளுக்கு பின் ஆடிப்படைப்பு திருவிழா; ஆயிரம் ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2024 10:07
எஸ்.புதுார்; எஸ்.புதுார் அருகே 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1000 ஆடுகள் பலியிட்டு ஆடிப்படைப்பு திருவிழா நடந்தது. எஸ்.புதுார் ஒன்றியம் கிழவயல் கிராமத்தில் சங்கிலிக்கருப்பர் கோயிலில் ஆடி படையல் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 1000க்கும் மேற்பட்ட ஆடுகளை பக்தர்கள் நேர்த்திக் கடனாக பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுவர். இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் சாமியாடி ஒருவர் இறந்த நிலையில் திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது மீண்டும் சாமி வந்து ஆடியதால் இந்த ஆண்டு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த மாதம் வெள்ளையம்மன் கோயிலில் இருந்து சாமியாடிகள் கரகம் எடுத்து ஒவ்வொரு ஊராகச் சென்று 7 நாட்கள் கிராம மந்தைகளில் அருள் வாக்கு கூறினர். இதைத் தொடர்ந்து நேற்று சங்கிலிக் கருப்பர் கோயில் ஆடிப்படைப்பு விழா நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக 1000க்கும் மேற்பட்ட ஆடுகளை கோயில் முன்பாக பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைத்து ஆடுகளின் இறைச்சியும் நள்ளிரவு சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அசைவ உணவு பரிமாறப்பட்டது. 10,000 பேருக்கு இந்த உணவு பரிமாறப்பட்டது. வழிபாட்டையொட்டி கோயில் முன்பாக பெரிய கிழவயல், சின்ன கிழவயல் மணியாரம்பட்டி கிராமத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.