தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுமங்கலி பூஜை
பதிவு செய்த நாள்
26
ஜூலை 2024 10:07
பெங்களூரு; பெங்களூரு காவல் பைரசந்திராவில் உள்ள தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடிக்கிருத்திகையை ஒட்டி, இன்று சுமங்கலி பூஜை நடக்கிறது. பெங்களூரு காவல் பைரசந்திரா தொட்டண்ணா நகரில் பிரசித்தி பெற்ற தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள மலைப்பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன், ஆனந்தன் என்பவர் பார்வையில், ஒரு வேல் தென்பட்டது. அந்த இடத்தில் ஊர் பஞ்சாயத்தார் சேர்ந்து, கோவில் கட்ட முடிவு செய்தனர். நடேசன், வெங்கட்ராமன் உட்பட முக்கிய பிரமுகர்கள் சேர்ந்து கோவில் எழுப்பப்பட்டது. அறுபடை முருகன் கோவிலில் ஒன்றான திருச்செந்துார் அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டத்தில், பிறவிலேயே வாய் பேச முடியாத குமரகுருபரரை, அருட்சக்தியால் பேச வைத்து பக்தராக்கினார் முருகப்பெருமான். கிருத்திகை அதிசயம்; அதுபோன்று, இப்பகுதியை சேர்ந்த பக்தர் ஒருவரின், 9 வயது வரை பேசாமல் இருந்த குழந்தையை, ஆடி கிருத்திகை அன்று பேச வைத்து அதிசயத்தை ஏற்படுத்தினார் தங்கமலை முருகப்பெருமான். முருகப் பெருமானிடம் பக்தர்கள், தங்கள் கோரிக்கைகளை தயக்கமின்றி சொல்வதற்காகவே, வள்ளி, தெய்வயானையை சற்று தள்ளியே பிரதிஷ்டை செய்துள்ளனர். மனைவியுடன் அமைந்த நவக்கிரஹ சன்னிதியும் இங்குள்ளது. தத்துவங்களில் ஒன்றான சைவ சித்தாந்தம் சொல்வது போன்று, 84 லட்சம் பிறப்புகளில் இருந்து விடுபட இக்கோவிலில் 84 படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. படிப்பாதையில் இடும்பன் காவடி எடுக்கும் காட்சியும், அவ்வையாருக்கு அருள் செய்யும் முருகனுடைய சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள முருகனை தரிசிப்போரின் வாழ்வில் பேரும், புகழும் தேடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் தைப்பூசம், வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, ஐப்பசி சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், படி உற்சவம் போன்ற விழாக்கள் பிரசித்தி பெற்றவையாகும். ஒருமுறையேனும் தங்கமலை முருகப்பெருமானை தரிசித்தால் தங்கள் வாழ்க்கையில் ஆனந்தம் பொங்கும் என்று நம்புகின்றனர். இங்கு, நடப்பாண்டு ஆடிக்கிருத்திகை, இம்மாதம் 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் கணபதி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நாகதேவி ஹோமம், மிருதுஞ்செய ஹோமம், துர்காதேவி ஹோமம், சிவபார்வதி ஹோமம், காலபைரவர் ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம், ஸ்ரீருத்ர ஹோமம் நடந்தது. மங்கள சண்டி ஹோமம்; இன்று மங்கள சண்டி ஹோமம்; மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை சுமங்கலி பூஜை நடக்கிறது. நாளை நவகிரஹ ஹோமம், இரவு 8:00 மணிக்கு பெங்களூரு காதம்பரி கலாஷேத்ரா குழுவினரின் பரத நாட்டியம் நடக்கிறது. ஜூலை 28ல் இரவு 7:00 மணிக்கு காவல்பைரசந்திரா ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்படுகிறது. இதன் பின் முருகருக்கு அபிஷேகம்; அதன்பின் சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கும். 8:30 மணி முதல் 12:00 மணி வரை சிறப்பு பக்தி பாடல்கள் பாடப்படுகின்றன. இரவு முழுதும் கோவில் நடை திறந்திருக்கும். 29ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன், சுப்பிரமணிய சுவாமிக்கு ஆடிக்கிருத்திகை காவடி திருவிழா ஆரம்பமாகிறது. சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய சிறு, குறு தொழில் துறை அமைச்சர் ேஷாபா கரந்தலாஜே, மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, உணவுத்துறை அமைச்சர் முனியப்பா, முன்னாள் மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, வீரப்ப மொய்லி, முன்னாள் எம்.பி., நாராயணசாமி, புலிகேசி நகர் எம்.எல்.ஏ., ஏ.சி.சீனிவாஸ், கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.முனிராஜு, தலைவர் கே.தயாளமணி, பொது செயலர் டி.முனேகவுடா, உதவி செயலர் கே.சேகரன், பொருளாளர் எஸ்.மகேந்திரன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர். மேலும் விபரங்களுக்கு 99729 99663, 98453 56637 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
|