பதிவு செய்த நாள்
16
நவ
2012
10:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, சங்காபிஷேகம் செய்ய, 1008 புதிய சங்குகளை, தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமனிடம், தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி வழங்கினார். இக்கோயிலில், சிவபெருமானுக்குரிய சோமவார நாட்களில், திருவிழா காலங்களில் தவிர, கோயில் சார்பில், 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. இதில், கார்த்திகை மாத சோமவாரம் தினத்தன்று, 1008 சங்காபிஷேகம் செய்வது சிறப்பு. பத்தாண்டுகளாக, தினமலர் நாளிதழ் சார்பில், கார்த்திகை முதல் சோமவார நாளில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. பழமையான இச்சங்குகள், எங்கிருந்து சேகரிக்கப்பட்டவை என தெரியவில்லை. சில சங்குகள் பழுதானதால், நிர்வாக அதிகாரி ஜெயராமன் வேண்டுகோள்படி, புதிய சங்குகளையும், அதை பாதுகாப்பதற்கான பலகைகளையும் வழங்க, தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி முன்வந்தார். ஆறு மாதங்களாக ராமேஸ்வரத்தில் சங்குகள் சேகரிக்கப்பட்டன. இதை, முறைப்படி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கம்பத்தடி மண்டபத்தில் 1008 சங்குகளை வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். இதைத்தொடர்ந்து வெள்ளிப் பேழையில் 11 சங்குகளை வைத்து, கோயில் பிரகாரங்களை டாக்டர் ஆர்.லட்சுமிபதி, சுப்பலட்சுமி லட்சுமிபதி ஆகியோர் வலம் வந்து, தக்கார் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி ஜெயராமனிடம் வழங்கினர்.