நகரி: காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வர சுவாமி கோவிலில், கோடி வில்வ அர்ச்சனை, குங்கும அர்ச்சனை நேற்று துவங்கியது. காளஹஸ்தி வாயு லிங்கேஸ்வர சுவாமி கோவிலில், கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி, 41 நாட்கள் காலை, மாலை நேரங்களில் வில்வம், குங்கும அர்ச்சனை நடத்தப்படுகிறது. வாயு லிங்கேஸ்வரர் சன்னிதியில் கோடி வில்வ அர்ச்சனையும், ஞானபிரசூணாம்பிகை சன்னிதியில், கோடி குங்கும அர்ச்சனையும் செய்யப்படும். பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், வில்வம் கொண்டு வரலாம். அர்ச்சகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். இதுவரை திங்கள்கிழமை, மாத சிவராத்திரி தினங்களில் மட்டும் நடந்து வந்த பிரதோஷ பூஜைகள், இனி தினமும் மாலையில் பிரதோஷ நேரத்தில் நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி பங்கு பெறலாம்.வரும், 19ம் தேதி அன்று கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி, தீப ஊர்வலம் நடைபெற உள்ளது என, கோவில் நிர்வாக அதிகாரி ராமச்சந்திரமூர்த்தி தெரிவித்தார்.