காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடாபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 2022 செப்., 1ம் தேதி பாலாலயம் நடந்தது. தொடர்ந்து 1 கோடி ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த மாதம் 12ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு பால், தேன், தயிர், இளநீர் என, பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், 108 சங்காபிஷேகமும் நடந்தது. இரவு ஹம்ஸ வாகனத்தில் எழுந்தருளிய ஆதிபீடாபரமேஸ்வரி காளிகாம்பாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபாராதனை காண்பித்து, அம்மனை வழிபட்டனர்.