பதிவு செய்த நாள்
01
ஆக
2024
11:08
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த, மாவிளக்கு ஊர்வலத்தில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் விழா, கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 28ம் தேதி கொடியேற்றமும் நடந்தது. 29ம் தேதி பொங்கல் வைத்து, குண்டம் திறக்கப்பட்டது. 30ம் தேதி பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், அதை தொடர்ந்து காலை, 5:45 மணிக்கு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து மாலையில் கோவிலை சுற்றியுள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துறை, கூடுதுறை மலை, அம்மன் நகர், வெல்ஸ்புரம், சுக்கு காபி கடை உட்பட சுற்று பகுதி கிராமங்களை சேர்ந்த பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்பு அம்மனுக்கு படைத்து சிறப்பு பூஜை செய்தனர். மாலையில் பக்தர்கள் அலகு குத்தி, ஊர்வலமாக வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்பு பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இன்று இரவு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், பரிவேட்டையும், தொடர்ந்து வானவேடிக்கையும் நடைபெற உள்ளது. இரண்டாம் தேதி மகா அபிஷேகம் மற்றும் மஞ்சள் நீராட்டும், மூன்றாம் தேதி ஆடிப்பெருக்கும், நான்காம் தேதி ஆடி அமாவாசை பூஜையும் நடைபெறுகிறது. ஐந்தாம் தேதி, 108 திருவிளக்கு பூஜையும், ஆறாம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது.