பதிவு செய்த நாள்
02
ஆக
2024
04:08
கோத்தகிரி; கோத்தகிரி கடைவீதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் நடந்த ஆடி வெள்ளி சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.
பேரூர் ஆதீனம் சாதலிங்க மருதாச்சல அடிகளார் ஆசியுடன், சரவணம்பட்டி குமரகுருபரர் வழிகாட்டுதல்படி, காலை, 6:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு, அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை சிறப்பாக நடந்தது. ஆடி மாதம் முதல் நாளில் இருந்து, மாத இறுதி நாள் வரை அம்மனின் ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படும் நிலையில், நேற்று சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பெண்கள் உட்பட பக்தர்கள் அகல் விளக்கு ஏற்றி, சிறப்பு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.