பதிவு செய்த நாள்
03
ஆக
2024
07:08
புனித நீராடலுக்குரிய நாட்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு அமைந்துள்ளது. தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆடிப்பெருக்கு. நம் முன்னோர்கள் காலத்தில் மாபெரும் திருவிழாவாக கொண்டாப்பட்டு வந்த ஆடிப்பெருக்கு இப்பொழுது வெறும் சம்பிரதாயமாக மாறி கொண்டு வருகிறது.’ஆடி பட்டம் தேடி விதை’ என்று ஒரு பழமொழி உள்ளது. ஆடி மாதத்தில் அனைத்து ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய தண்ணீர் தாராளமாக கிடைக்கும்.எனவே ஆடி மாதத்தில், பயிரிட்டால் தை மாதம் அறுவடை செய்யலாம். அதைத்தான் நம் முன்னோர்கள் பழமொழியில் கூறியுள்ளார்கள்.
பல ஆண்டுகளுக்கு பிறகு நமது ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும் இது ஒரு மகிழ்ச்சியான தருணம்.ஆடிப்பெருக்கு பண்டிகை ஆடி மாதம், 18ம் தேதி ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது மக்கள் குடும்பத்துடன் ஆற்றுக்கு சென்று குளித்துவிட்டு கடவுளை வணங்குவது ஆடிப்பெருக்காக நம் மக்க ளால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிப்பெருக்கு தமிழர்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று.திருமண வாழ்வுஆடிப்பெருக்கும் திருமண வாழ்வும் தமிழ் சமூகத்தில் பெரும்பாலும் புதிதாய் திருமணமான தம்பதிகளை பிரித்து வைத்திருப்பார்கள். ஆனால் அதேநேரம், ஆடிப்பெருக்கு அன்று தாலி பிரித்து கட்டுதல் என்ற ஒரு சடங்கும், பின்பற்ற பட்டு வருகிறது. புதிதாக திருமணம் முடித்த தம்பதியர், புத்தாடை உடுத்தி தாலிக்கயிறை மாற்றி மீண்டும் தாலி கட்டுவர். இதனால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் மகிழ்ச்சியாய் வாழலாம் என்பது காலங்காலமாக உள்ள ஐதீகம்.’செல்வமும் பெருக்கு’ இந்த நாளில், ஸ்ரீ மகாலட்சுமி தேவி பூரண மகிழ்ச்சியுடன் காட்சியளிப்பார். எனவே, அந்த நேரத்தில், ஸ்ரீ லட்சுமி தேவியை வணங்கும்போது கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, ஆடிப்பெருக்கன்று லட்சுமி தேவியை வழிபட்டால் செல்வம், குழந்தை பாக்கியம், தைரியம் என அனைத்தும் கிடைக்கும்.
அதேபோல ஆடிப்பெருக்கு அன்று குபேரனை வழிபடுவது எவ்வளவு பெரிய நஷ்டத்திலிருந்தும் மீண்டு வர வழிவகுக்கும்.பலன்கள் ஆடிப்பெருக்கன்று இயற்கையையும், கடவுளையும் வழிபடுவது ஆற்றில் எவ்வாறு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறதோ, அதேபோல உங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் அதிகரிக்க செய்யும். அதுமட்டுமின்றி ஆடிப்பெருக்கு என்பது வீட்டிற்குள் அடைந்து கிடக்க கிடைக்கும் விடுமுறை அல்ல, உற்றார் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியை பகிர கிடைத்த நாளாகும். இன்று ஆடிப்பெருக்கு நாயகர் ரங்கநாதரை வணங்க நல்லதே நடக்கும்.