பதிவு செய்த நாள்
03
ஆக
2024
10:08
திருச்சி, ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் அதிகாலை, 4 மணி முதலே மக்கள் கூட்டம் வரத்துவங்கியது. திருமணமான பெண்கள், புதுமண தம்பதியர், கன்னி பெண்கள் என அனைவரும் முளைப்பாரி, மங்கல பூஜை பொருட்கள், திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகள் ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர். காவிரியில் நீராடி புத்தாடை அணிந்து முளைப்பாரி, திருமண மாலைகளை காவிரி ஆற்றில் விட்டனர். பின் படித்துறையில் வாழை இலை போட்டு, அதில் பச்சரிசி, மஞ்சள், குங்குமம், வெல்லம், தேங்காய், பூ, பழம் வைத்து பூஜை செய்து காவிரிக்கு கற்பூர ஆரத்தி காட்டி குடும்பத்துடன் வணங்கினர். ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி தங்க பல்லக்கில் அம்மா மண்டபம் சிறப்பு புறப்பாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.