பதிவு செய்த நாள்
06
ஆக
2024
10:08
திருப்போரூர்; தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில் ஆடித்திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம், நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வடம் பிடித்து இழுத்தனர்.
திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில், பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் கூழ்வார்த்தல் விழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான விழா, கடந்த 1ம் தேதி, கணபதி பூஜையுடன் துவங்கியது. 2ம் தேதி பால்குடம் எடுத்தல், ஊருணி பொங்கல் வைத்தல், காப்பு கட்டுதல், அம்மன் சக்தி கரகம் வீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம், கூழ்வார்த்தல் நிகழ்ச்சிநடந்தது.
முக்கிய விழாவான தேரோட்டம், நேற்று நடந்தது. அதனையொட்டி, மதியம் 1:00 மணியளவில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பிரகாரம் சுற்றி வந்து, அம்மன் தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், தாய் வீட்டு சீர்வரிசை எடுத்தல், திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. பின், மாலை 4:00 மணிக்கு, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க, தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தேரோட்டத்தைக் காண, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் உணர்ச்சிப்பெருக்கில், ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்கள் எழுப்பினர். தேரோட்டத்துக்கு, திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.