பதிவு செய்த நாள்
07
ஆக
2024
12:08
மேல்மருவத்துார்; ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 53வது ஆடிப்பூர பெருவிழா, துவங்கியது. அதில், ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள், பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டு, 53வது ஆடிப்பு பெருவிழா, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், கலசவிளக்கு வேள்வி பூஜையுடன், நேற்று முன்தினம் துவங்கியது. தொடர்ந்து, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, மங்கல இசையுடன் மேளதளங்கள் ஒலிக்க, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பங்காரு அடிகளார் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜையும், சுயம்பு அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் நடந்தது. இதில், செவ்வாடை பக்தர்கள், கஞ்சி கலயம் எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர். அதன்பின், சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், கலெக்டர் அருண்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். இன்று வரை பாலாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில், கோயம்புத்துார், திருப்போரூர் மாவட்டங்களின் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி சதாசிவம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.