ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா இன்று காலை நடைபெற்றது.
ஜூலை 28ல் கொடியேற்றத்துடன் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா துவங்கியது. அன்றிரவு 16 வண்டி சப்பரம் நடந்தது. தினமும் காலையில் ஆண்டாள் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதி உலாவும் நடந்தது. ஐந்தாம் திருநாளான ஆக., 3 காலை பெரியாழ்வார் மங்களாசாசனமும், இரவு ஐந்து கருட சேவையும் நடந்தது. ஏழாம் திருநாளான நேற்று முன் தினம் இரவு ஆண்டாள், ரெங்க மன்னார் சயன சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அதிகாலை 4:30 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னார் திருத்தேருக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9:05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள், பட்டர்கள் செய்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.