பதிவு செய்த நாள்
13
ஆக
2024
05:08
தஞ்சாவூர், நாகை மாவட்டம் கீழையூர் செம்மலைநாதர் என்கிற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சேர்ந்த வரலாற்றை அறிந்துக்கொள்ள விரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியர் கண்ணன், ஓய்வு பெற்ற டி,ஆர்,ஓ, முகமதுஆரிபு உள்ளிட்ட கிராம மக்கள், தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலக தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணிமாறனிடம் தெரிவித்தனர்.
இதன்பேரில், மணிமாறன், பொந்தியாகுளம் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராஜன், சக்கராப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் நேரில் அவ்வூருக்குச் சென்று கள ஆய்வு செய்தனர்.
இது குறித்து மணிமாறன் கூறியதாவது: செம்மலைநாதர் கோவிலில் உள்ள சிற்பங்கள், கட்டுமானங்கள் சோழர் காலத்தை சார்ந்துள்ளது. சோழர்கள் காலத்தில் முக்கியத்துவம் பெற்ற கோவிலாக திகழ்ந்துள்ளது. பிறகு பாண்டியர் காலத்திலும் கோவில் புதுப்பிக்க பெற்று அம்மனுக்கு சிறு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நாயக்க மற்றும் மராட்டிய மன்னர்களால் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. கோவில் கருவறைக்கு முன்பு முக மண்டபத்தின் வடபுறத்தில் துவங்கி கருவறையின் பின்புறம், கோவிலின் தென்புறச் சுவர் முழுவதுமாக கல்வெட்டுகள் நிறைந்துள்ளது. இக்கல்வெட்டு செய்திகள் பதிவு செய்யப்படாமலும், வெளியுலகம் அறிந்து கொள்ள முடியாமலும் இதுநாள் வரை இருந்துள்ளது. இதில், கருவறைக்கு முன் உள்ள மண்டபத்து துாணில், முதலாம் ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி குறித்த பழமையான கல்வெட்டு உள்ளது. வெளிப்புறச் சுவற்றில் திரிபுவன சக்கரவர்த்திகள், இரண்டாம் ராஜராஜன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன், பராக்கிரம பாண்டியன் போன்றோரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ராஜராஜ சோழ வளநாட்டு, அளநாட்டு பிரம்மதேசம், ஸ்ரீ ராஜராஜ சதுர்வேதிமங்கலம் என இவ்வூர் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் இறைவன் பெயர் ஸ்ரீ சிவபாத ஈஸ்வரமுடையார் என்றும், இவ்வூரின் மையத்தில் உள்ள விஷ்ணு கோவில் ஜலசயன பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்பெற்றுள்ளது. திருப்பள்ளி எழுச்சி, திருக்கார்த்திகை திருவிழா, அமுது படையலுக்கு நிலதானம், அதன் எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டு பழமை மிக்க சிவாலயத்தின் சிறப்பினையும், அவ்வூரின் வரலாற்றினையும் முழுமையாக அறிய இங்குள்ள கல்வெட்டுகளைப் படி எடுத்தால் பல வரலாற்று செய்திகள் கிடைக்கும் இவ்வாறு அவர் கூறினார்.