பதிவு செய்த நாள்
17
நவ
2012
10:11
பழநி: கந்தசஷ்டியையொட்டி பழநி மலைக்கோயிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு மலைகோயில் சன்னதி திறக்கப்படும்.உச்சிக்காலத்திற்கு பின் சாயரட்சை கால பூஜை மதியம் 1.30 மணிக்கு நடைபெறும். சூரர்களை வதம் செய்யும் பொருட்டு சின்னக்குமாரசுவாமி மலைக்கொழுந்து அம்மனிடம் மாலை 3 மணிக்கு பராசக்தி வேல் வாங்குவார். நவவீரர்கள் புடை சூழ சின்னக்குமாரசுவாமி தங்கச்சப்பரத்தில் படி வழியாக அடிவாரம் பாத விநாயகர் கோயில் அருகே எழுந்தருள்வார். பராசக்தி வேல் திருஆவினன்குடி கோயில் சென்று பூஜை செய்த பின் மீண்டும் பாத விநாயகர் கோயில் வந்தடையும்.
சூரசம்ஹாரம்: பெரிய தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரசுவாமி கத்தி, கேடயம், வில், அம்புடன் வடக்கு கிரிவீதியை வந்தடைவார். மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூர வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். பராசக்தி வேலுடன் சுவாமி புறப்பாட்டிற்கு பின் மாலை 3.30 மணிக்கு மேல் மலைகோயில் சன்னதி நடை அடைக்கப்படும். சூரசம்ஹாரம் முடிந்த பின் சுவாமி மலைகோயிலை அடைந்த பின் இரவு 12 மணிக்கு மேல் சன்னதி திறக்கப்பட்டு அர்த்த ஜாம பூஜை நடைபெறும். தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு இருக்காது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் செய்து வருகிறார்.