பதிவு செய்த நாள்
19
நவ
2012
11:11
தூத்துக்குடி: அரோகரா கோஷத்துடன், திருச்செந்தூர்கடற்கரையில் சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். திருச்செந்தூர் முருகன்கோயில் கந்தசஷ்டி விழா, நவ.,13 ல் துவங்கியது. ஆறாம் நாளான இன்று, சூரசம்ஹாரம் நடந்தது. கோயில் நடை, அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 3.45 மணிக்கு, சூரன் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டார்; 4.15 மணிக்கு, சுவாமி ஜெயந்திநாதருக்கு கந்தசஷ்டி விரத மண்டபத்தில் அபிஷேகம் நடந்தது; 4.50 மணிக்கு சுவாமி, சூரனை வதம் செய்ய, கடற்கரைக்கு புறப்பட்டார்; 5.35 மணிக்கு சூரசம்ஹாரம் துவங்கியது. முதலில், யானைத் தலையுடன் வந்த சூரன், சுவாமியை ஆணவத்தோடு மூன்றுமுறை வலம் வந்து போரிட்டான். மாலை 5.58 மணிக்கு, ஜெயந்திநாதர் சூரசம்ஹாரம் செய்தார். பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷம் எழுப்பினர். இரண்டாவதாக, சிங்கத் தலையுடனும், மூன்றாவதாக சுயரூப சூரபத்மனாகவும் போரிட்ட சூரனை, சம்ஹாரம் செய்தார். நான்காவதாக, சேவல் உருவில் போரிட்ட சூரனை, தனது கொடியாகவும், மாமரமாகவும் சுவாமி ஆட்கொண்டார். தொடர்ந்து, சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார். சம்ஹாரம் முடிந்ததும் விரதமிருந்த பக்தர்கள் கடலில் நீராடி, விரதத்தை முடித்தனர். நாளை சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.விழாவில், அமைச்சர்கள் ஆனந்தன், கோகுல இந்திரா, செல்லப்பாண்டியன், வெங்கடாச்சலம், கலெக்டர் ஆஷிஷ்குமார், டி.ஐ.ஜி., சமித்சரண், ராஜேந்திரன் எஸ்.பி., பங்கேற்றனர்.