அம்மன் கோயில்களில் முளைப்பாரி உற்ஸவ விழா; களை கட்டிய கிராமங்கள்
பதிவு செய்த நாள்
28
ஆக 2024 05:08
பெரியபட்டினம்; பெரியபட்டினம் அருகே இலங்காமணி கிராமத்தில் ஹிந்து சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. மூலவர் பத்திரகாளியம்மன் சுடலைமாடசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் உள்ள சுடலைமாடன் சாமிக்கு மஞ்சள் கலைய நீர் வைக்கப்பட்டு, கிடாய், சேவல் பலியிடப்பட்டு, படைப்புக் கஞ்சியும், ஏராளமான பெண்கள் பொங்கலிட்டும் சிறப்பு பூஜைகள் செய்தனர். விழா கமிட்டி தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் பார்த்தீபன், பொருளாளர் மாரியப்பன், லிங்கராஜன், லிங்கேஸ்வரன், அழகுமுருகன் உட்பட இலங்காமணி கிராம பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். இன்று மாலை 4:00 மணிக்கு ஏராளமான பெண்கள் பாரி சுமந்து இலங்காமணி ஊரணியில் கங்கை சேர்த்தனர். * களிமண்குண்டு அருகே சவட்டையன் வலசை கிராமத்தில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவ விழா நடந்தது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவர் காந்தாரி அம்மன், பாலமுருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று xஇரவு 10:00 மணிக்கு காந்தாரியம்மன் கோயில் முன்புறம் உள்ள வளாகத்தில் அக்னி வளர்க்கப்பட்டு அதிகாலை 4:00 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்கள் பூவிறங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. களிமண்குண்டு ஊராட்சி தலைவர் வள்ளி, பி.கருப்பையா, எம்.கருப்பையா மற்றும் சவட்டையன் வலசை முத்தரையர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். * திருப்புல்லாணி வடக்கு தெருவில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவைகள் நடந்தது. இன்று மாலை 5:00 மணிக்கு அம்மன் சக்தி கரகம் முன்னே செல்ல ஏராளமான பெண்கள் முளைப்பாரியை சுமந்து மதகு குட்டம் ஊருணியில் கங்கை சேர்த்தனர். பூஜைகளை அர்ச்சகர் முத்தையா, முத்து சரவணன் ஆகியோர் செய்திருந்தனர். முளைப்பாரி உற்ஸவத்தை முன்னிட்டு சின்னாண்டி வலசை முத்துமாரியம்மன் கோயிலில் விழா நடந்தது. மின்னொளி அலங்காரத்தால் கிராமங்கள் களை கட்டியது.
|