திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், சென்னையில் உள்ள அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினர் சார்பில், 12ம் ஆண்டு வள்ளி, முருகன் திருக்கல்யாண மஹோற்சவம், நேற்று நடைபெற்றது. இதில், திருமண வரம் வேண்டி, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 9:00 மணியளவில் வள்ளி, மணவாள பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆன்மிக சொற்பொழிவாளர் இளம்பிறை மணிமாறன், சிறுவாபுரி முருகனின் மகிமைகள் குறித்துப் பேசினார். தொடர்ந்து, திருக்கல்யாண மஹோற்சவம் நடந்தது. திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமணக் கோலத்தில் வள்ளி, மணவாள பெருமான் உள்புறப்பாடு சென்றார். பிரசாதமாக பெற்ற மாலையை அணிந்தபடி பிரார்த்தனையாளர்கள், வள்ளி, மணவாள பெருமானைப் பின்தொடர்ந்து, ஆறு முறை கோவிலை வலம் வந்தனர். கோவிலின் செயல் அலுவலர் கார்த்திகேயன் மேற்பார்வையில், தலைமை குருக்கள் ஆனந்தன் தலைமையிலான அர்ச்சகர்கள், திருமண வைபவத்தை நடத்தினர். ஆரணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.