பதிவு செய்த நாள்
04
செப்
2024
12:09
அவிநாசி; அவிநாசி அடுத்த சேவூரில் எழுந்தருளியுள்ள அறம் வளர்த்த நாயகி அம்பிகை உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக யாகசாலை வேள்வி பூஜைகள் துவங்கியது.
அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சியில் நடுச் சிதம்பரம் என சிறப்பு பெற்ற அறம் வளர்த்த நாயகி அம்பிகை உடனமர் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்றது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான புராதனமிக்க பழமை வாய்ந்த சோழர்கள் கால கோவிலாக விளங்கும் அறம் வளர்த்த நாயகி அம்பிகை உடனமர் வாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கடந்த ஜூன் 27ம் பாலாலயம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில், சிற்பங்கள்,கோபுரங்கள் புனரமைக்கும் பணிகள், வண்ணம் தீட்டுதல் ஆகியவை நடைபெற்று வந்தது. தற்போது கும்பாபிஷேக திருப்பணிகள் முடிந்து வரும் 6ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7:45 மணிக்கு மேல் 8:45 மணிக்குள் கன்யா லக்னத்தில் ஸ்ரீ மாணிக்கவாசகர்,கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன 57 ம் குருமகா சந்நிதானம் ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்க வாசக சுவாமிகள் முன்னிலையில், ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ வாலீஸ்வரர், ஸ்ரீ சிவகாமி அம்பிகை உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமான் ராஜகோபுரம் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமிகள் மற்றும் அரண் பணி அறக்கட்டளை தியாகராஜன், சிவாசலம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இன்று ஸ்ரீ விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம்,கும்பாலங்காரம். பூர்ணாஹீதி ஆகியவையுடன் முதல் கால யாக பூஜைகள் தொடங்குகின்றது. நாளை பரிவார தெய்வங்களுக்கு யந்திர ஸ்தாபனம், திரவியாஹீதி, த்வார மண்டப வேதிகார்ச்சனை, வேதாகம பாராயணம் ஆகியவையுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெறுகின்றது. கும்பாபிஷேக தினமான 6ம் தேதி நாடி சந்தனம், யாத்ரா தானம், கலசங்கள் புறப்பாடு நடைபெற்று ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கும்பாபிஷேகம், பரிவார தெய்வங்கள், மூலவர் ஆகியவற்றுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. நேற்று கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டோர் தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன், சேவூர் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.