பதிவு செய்த நாள்
05
செப்
2024
07:09
சென்னை; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை, அண்ணாசாலை பூம்புகார் விற்பனையகத்தில்,‘கணபதி தரிசனம்’ எனும் பெயரில் கண்காட்சி துவக்கப்பட்டு உள்ளது. பூம்புகார் எனப்படும், தமிழக அரசின் கைத்திற தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது, கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு,‘கணபதி தரிசனம்’ எனும் பெயரிலான கண்காட்சி, சென்னை அண்ணாசாலையிலுள்ள பூம்புகார் விற்பனையகத்தில் துவக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, களிமண், காகிதக்கூழ், பளிங்கு, மரம், கருங்கல், சுட்ட மண் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பல வகையான விநாயகர் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. மேலும், 32 வகையான கணபதி, வல்லப கணபதி, சித்தி புத்தி விநாயகர், லட்சுமி, ராஜகணபதி, பிள்ளையார்பட்டி கணபதி, லிங்க, நர்த்தன, சயன, பாகுபலி, தவழும் கணபதி, குடை கணபதி உள்ளிட்ட பொம்மைகள், பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றன. ஆறு, ‘இன்ச்’ கொண்ட விநாயகர் சிலை, 400 ரூபாய் முதல், 3.5 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை, 13,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து வகை பொம்மைகளுக்கும், 10 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது. வரும் 12ம் தேதி வரை நடத்தப்படும் இக்காண்காட்சிக்கு, பார்வையாளர்கள் தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். இதேபோல,‘கணபதி தர்ஷன்’ கண்காட்சி, ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர்ட் மையத்திலும், பூம்புகார் சார்பில் துவக்கப்பட்டுள்ளது.