பதிவு செய்த நாள்
05
செப்
2024
12:09
இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன், ஆசிரியர் பணியில் ஈடுபாடு கொண்டவர். அவரது பிறந்த தினமான செப். 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
வாழ்க்கையில் உயர்வதற்கு கல்வியே சிறந்த வழி. மாணவர்களுக்கு கல்வி, நற்பண்புகளை கற்றுத்தரும் ஆசிரியர் பணி கடவுளுக்கு இணையானது என போற்றப் படுகிறது. ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகிறது. தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். எனவே நம் வாழ்வில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கூறுவோம். நம் வாழ்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கம் செலுத்துவோம். எல்லா ஆசிரியர்களும் இறைவனின் வரங்கள் என்பதை நினைவில் கொள்வோம். "ஆச்சார்ய தேவோ பவ" என்பதை நினைவில் கொள்வோம்.
தந்தைக்கு சமமான ஆசிரியர்: மிதிலைக்கு ராமரை அழைத்துச் சென்றார் விஸ்வாமித்திரர். சீதையின் தந்தை ஜனகரிடம் அவரை அறிமுகப்படுத்தினார். ராமன் பிறந்த சூரியவம்சத்தின் பெருமையைச் சொன்னார். அவரது முன்னோரான சூரியன், மநு, ப்ருது, இக்ஷ்வாகு, ககுஸ்தன், மாந்தாதா, பகீரதன், ரகு என்று எல்லாருடைய வீர தீரப் பிரதாபங்களை அடுக்கினார். தசரதர் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக ராமன் பிறந்ததைக் கூறினார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இந்த ராமன் தசரதருக்குப் பெயரளவில் மட்டுமே புத்திரன். ராம சகோதரர்கள் நால்வரையும் வளர்த்த பெருமை, அவர்களது குலகுரு (ஆசிரியர்) வசிஷ்டரையே சாரும், என்று புகழ்ந்தார். ப்ரச்நோபநிஷத் என்னும் உபநிஷதத்தில் சீடர்கள், த்வம் ஹி ந: பிதா என்று சொல்லி குருவை வணங்கினர். இதற்கு நீங்கள் அன்றோ எங்களின் தந்தை என்று பொருள். இந்த ஸ்லோகத்தின் அடிப்படையிலும், விஸ்வாமித்திரரின் சொல்லின் அடிப்படையிலும் ஆசிரியரும் தந்தை ஸ்தானத்துக்கு சமமானவர் என்பது தெளிவாகிறது.