பதிவு செய்த நாள்
08
செப்
2024
12:09
திருப்பூர்; ‘பக்தியில் நாங்களும் சளைத்தவர் அல்ல...என்று, விநாயகர் சதுர்த்தி விழா, கொண்டாடிய சிறியவர்களின் பக்தியும் சிறப்பானதே’ என, பலரும் பாராட்டினர்.
திருப்பூர் நகரம் முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. ஹிந்து அமைப்புகள், ஒவ்வொரு பகுதியிலும், தற்காலிக பந்தல் அமைத்து, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். தாராபுரம் ரோடு, செட்டிபாளையம் வெங்கடேஸ்வரா நகர் விரிவு பகுதியில், சிறிய குடில் அமைத்து, பெரிய கடவுளான விநாயகர் சிலைகளை வைத்து, சிறுவர்கள் நேர்த்தியாக வழிபட்டது, பார்ப்போரை பரவசப்படுத்தியது. சிறுவர்கள் குழுவாக இணைந்து, உண்டியலில் பணம், 600 ரூபாய் சேர்த்தனர். அதில், மூன்று விநாயகர் சிலைகளை வாங்கினர். அருகே இருந்த, கற்கள், அட்டைப்பெட்டி, துணி போன்றவற்றை எடுத்துவந்து, சிறிய மேடையும், கூடாரமும் அமைத்து, தற்காலிக ெஷட் தயார் செய்தனர். பேட்டரி மற்றும் எல்.இ.டி., விளக்குகளையும் வாங்கி வந்து பொருத்திவிட்டனர். நேற்று, சிலைகளை பிரதிஷ்டை செய்து, மலர் மாலை அணிவித்து, தீபம் ஏற்றி வைத்து, தலைவாழை இலையில், பழ வகைகள், பொரிகடலை, இனிப்புகளை படைத்து, வழிபட்டனர். போன்களில் பக்தி பாடல்களை ஒலிபரப்பியபடி, வாழ்த்து பாடல்களை பாடி, விக்ன விநாயகரை வழிபட்டனர். இதனைப்பார்த்த அப்பகுதி மக்களும், சிறார்களின் பக்தியை பாராட்டி, வழிபாட்டில் பங்கேற்றனர்.
பல்லடத்திலும்...
பல்லடம், மாணிக்கா புரம் ஊராட்சி, சி.எம்., நகர் பகுதியில் உள்ள சிறுவர்கள் இணைந்து, குடில் அமைத்து விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்திருந்தனர்.
சிறுவர்கள் கூறுகையில், ‘பெரியவர்கள் அளித்த ஊக்கம் காரணமாக, தென்னங்கீற்றுகளால் சிறிதாக குடில் அமைத்து, அதில், சிறிய விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தோம். மூன்று நாள் வழிபாட்டைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (நாளை) சிலைகளை பி.ஏ.பி., வாய்க்காலில் கரைத்து விடுவோம்,’ என்றனர்.